சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதியது. மற்றொன்று தில்லைச் சிற்றம்பலவன் கொற்றங்குடி உமாபதி சிவத்திற்கு எழுதியது. இரு திருமுகங்களும் மதுரை வெள்ளியம்பலவாணரும், தில்லைப் பொன்னம்பலவாணருமாக எழுதியிருப்பினும் சேர மன்னருக்கு எழுதிய திருமுகத்தில் பெருமிதப் பண்பும், அடியவராகிய உமாபதி சிவத்திற்கு எழுதிய திருமுகத்தில் எளிமைப்பண்பும் இழையோடுவதையும் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற அமைப்பு உடைமையையும் எண்ணி இன்புறலாம். இவ்விரு திருமுகங்களும் கடிதம் எழுதும் பாங்கினை நமக்கு அறிவுறுத்துவனவாயுள்ளன. 1. ஆலவாயண்ணல் திருமுகப்பாசுரம் ஆலவாய்ச் சிவனார் எழுதிய திருமுகமே பதினொன்றாந் திருமுறையில் முதல் பாடலாக இடம் பெற்றிலங்குகிறது. இறைவன் வேதம் ஓதினார் என்பர். “வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறி” என்பது சம்பந்தர் தேவாரம். தமிழ் வேதமாகிய திருமுறைகளை அடியவர்கள் வாயிலாகவே இறைவன் அருளிச் செய்தான். “எனதுரை தனதுரையாக” என்ற இலம்பையங்கோட்டூர்த் தேவாரம் இதனை இனிது உணர்த்தும். இருப்பினும் பதினொன்றாந் திருமுறையில் “மதிமலி புரிசைமாடக் கூடல்” என்னும் திருமுகப்பாசுரம் ஆலவாய் அண்ணலே அருளியது. இது இத்திருமுறையின் தனிச் சிறப்பாகும். மதிமலி புரிசை மாடக் கூடல் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு அன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக்கொண்மூப் படியெனப் பாவலர்க்கு ஒருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே இத்திருமுகப்பாசுரம் ஆலவாயண்ணல் சேரமான் பெருமாள் நாயனாராகிய சேரமன்னருக்குப் பாணபத்திரர் வாயிலாக அனுப்பியதாகும்.
|