அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங் குடியார்க் கெழுதிய கைச்சீட்டுப் - படியின்மிசை பெத்தான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து முத்தி கொடுக்க முறை இது தில்லைக் கூத்தப்பெருமான் சந்தானாசாரியருள் நான்காமவராகிய உமாபதி சிவாசாரியாருக்குப் பெத்தான் சாம்பான் வாயிலாக அனுப்பிய திருமுருகம். பதினொன்றாந் திருமுறை திருஆலவாயுடையார் திருமுகப்பாசுரத்தையே முதலாக இந்நூலின் முகமாக உடையது இப்பதினொன்றாம் திருமுறை. இதனைப் பன்னிருவர் அருளிச் செய்துள்ளனர் என்பதற்கேற்ப இத்திருமுகப்பாசுரம் பன்னிருவரிகளையே கொண்டுள்ளது. இதில் நாற்பது நூல்கள் உள்ளன. அனைத்தும் தமிழில் அமைந்த தொண்ணூற்றாறு பிரபந்த வகையைச் சேர்ந்தவை.
2. காரைக்காலம்மையார் திருமுகப்பாசுரத்தை அடுத்துக் காரைக்காலம்மையார் அருளிச்செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 2, திருஇரட்டை மணிமாலை 1, அற்புதத் திருஅந்தாதி 1, ஆகிய நான்கு நூல்கள் அமைந்துள்ளன. கி.பி. 3-ஆம் நூற்றாண்டினர் எனக் கருதப்பெறும் காரைக்காலம்மையார்தான் முதன் முதலில் பண்ணொன்ற இசைப் பதிகம் பாடியவர். அதனால்தான் இவர் பாடியருளிய “கொங்கை திரங்கி” எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணமைந்த பதிகமும், “எட்டி இலவம் ஈகை” எனத் தொடங்கும் இந்தளப் பண்ணமைந்த பதிகமும் மூத்த திருப்பதிகங்கள் எனப் போற்றப் பெறுகின்றன. “கொங்கை திரங்கி” என்னும் பதிகத்தின் ஒன்பதாம் பாடலில் சப்தஸ்வரங்கட்கும் அதாவது ஏழோசைகட்கும் தமிழில் பெயர் சூட்டியுள்ளமையைக் காணலாம். “துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி ஓசைபண் கெழுமப்பாடி” என்பது அப் பாடற்பகுதி. இறைவழிபாட்டை வணிகமாக்கிவிடக் கூடாது. வழிபடுவது நமது கடமை என்பதை அற்புதத் திருவந்தாதியில் உணர்த்துகிறார் அம்மையார். அப்பாடல், இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் - சுடர்உருவில்
|