என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு) அன்பறா(து) என்நெஞ்(சு) அவர்க்கு 3. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இவர் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர். குறுநில மன்னர். “க்ஷேததிரத் திருவெண்பா” என்னும் நூலை அருளிச் செய்தவர். இந்நூல் வெண்பா யாப்பில் 24 பாடல்களைக் கொண்டுள்ளது. இவர் 275 பாடல் பெற்ற தலங்கட்கும் ஒவ்வொரு பாடல் வீதம் பாடியிருக்கக்கூடும். அனைத்தும் கிடைத்தில. நூல் முழுவதும் நிலையாமையை அறிவித்து நிலையுடைய ஈசன் கழலேத்தி இன்புற வலியுறுத்துகிறார். தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே நெடுங்களத்தான் பாதம் நினை என்பது நிலையாமையை உணர்த்தி திருநெடுங்களத் தீசனைத் துதிக்கும் பாடல். 4. சேரமான் பெருமாள் நாயனார் இவர் அறுபத்துமூவரில் ஒருவர். சேரமன்னர். சுந்தரரின் தோழர். இவர் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞானவுலா என்னும் மூன்று நூல்களை அருளியவர். இவர் அருளிய உலாநூல் முதன் முதலில் செய்யப் பெற்றதால் ஆதிஉலா எனப் போற்றப் பெறுகிறது. கயிலைப் பெருமான் திருமுன்பு அரங்கேற்றப் பெற்ற சிறப்பிற்குரியது. அரிவைப்பெண் பகுதியில், இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் என்ற தொடர்களில் திருக்குறளை அப்படியே எடுத்தாண்டுள்ளார். அதில் சேரும் இடத்திலேயே மேலும் செல்வம் சேர்வதைப்போல் பரந்த அல்குற் பரப்பிற்கே மேகலை என்னும் அணியைச் சூழ்ந்தனரே அன்றி சுருங்கிய இடைக்கு ஏதும் அணிசெய்தாரில்லை என்று கூறுமுகத்தால் வினைத் தத்துவத்தை விளக்கியுள்ளார்.
|