கோலத்தைத் திருவாசகமும் எடுத்து ஓதுகிறது. அப்பாடல் வருமாறு, தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையுமுடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ மனிதன் குறிக்கோளுடன் வாழவேண்டும். நம்மிடம் உள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றாலும் நியதியாக இறைபணி புரிதல் வேண்டும். அப்போதுதான் உயிர் உயர, உய்தி பெற முடியும். சேரமான் பெருமாள் தமது உடல் உறுப்புக்களுக்குக் கட்டளையிட்டுள்ளமையை அறிவிக்கும் பாடல் வருமாறு. சிந்தனைசெய்ய மனம் அமைத்தேன், செப்பநா அமைத்தேன் வந்தனைசெய்யத் தலை அமைத்தேன், கைதொழ அமைத்தேன் பந்தனை செய்வதற்குஅன்பமைத்தேன், மெய் அரும்பவைத்தேன் வெந்தவெண் ணீறணி ஈசற்கு இவையான் விதித்தனவே இதே கருத்தில் இறைவன் மணிவாசகருக்கு உறுப்புக்களை அமைத்துக் கொடுத்தமையைத் திருவாசகம் பேசுகின்றது. அப்பாடல் சிந்தனைநின் றனக்காக்கி, நாயி னேன்றன் | கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி, | வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி, வாக்குன் | மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர | வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை | மாலமுதப் பெருங்கடலே! மலையே! உன்னைத் | தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித் | தனிச்சுடரே! இரண்டுமிலித் தனிய னேற்கே |
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடிஎன்மனத்தே வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும் இவ்வையகத்தே என்று அப்பர் அருளியதைப்போலவே சேரமானாரும் ஒரு பாடல் அருளியுள்ளார். அப்பாடல் வருமாறு, பொய்யாநரகம் புகினும் துறக்கம்புகினும் போந்துபுக்கிங்கு உய்யா உடம்பினோடுஊர்வ நடப்ப பறப்ப என்று நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர் மையார் மிடற்றான் அடிமறவா வரம் வேண்டுவனே.
|