5. நக்கீரர் நக்கீரர் சங்ககால நக்கீரர் என்றும் பிற்கால நக்கீரர் என்றும் ஆய்வறிஞர்களால் பேசப்படுகின்றார். இத்திருமுறையில் இடம் பெற்றுள்ள, கைலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருஈய்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், கார்எட்டு, போற்றித்திருக்கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்ற பத்துப் பிரபந்தங்களும் சங்ககாலத்து நக்கீரர் அருளிச் செய்ததாகவே சமய உலகம் கருதுகிறது. இவற்றுள் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதியில் உள்ள ஒரு பாடலை மட்டில் இங்கு நோக்குவோம். காலன் என்றும், இயமன் என்றும், நடுவன் என்றும், தருமன் என்றும், நமன் என்றும் பேசப்படுபவன் இமயதர்மராசன். இவன் தன் தூதுவர்க்குச் சொல்லும் பாடல் கவனிக்கத்தக்கது. குற்றமில்லாதவன் இறைவன் ஒருவனே. அவன் அடியவர்களும் பழுதில்லாதவர்களே. அவர்களிடத்தில் நம் தூதுவர்களும் செல்லக்கூடாது. அவர்களைக் கண்டால் பணிந்து வெகுதூரம் அகன்று போய் விடுங்கள் என்று தூதுவர்கட்கு அறிவுரை பகர்கின்றான் நமன். அப்பாடல், தொழுது நமனும்தன் தூதுவர்க்குச் சொல்லும் வழுவில் சீர்க்காளத்தி மன்னன் - பழுதிலாப் பத்தர்களைக் கண்டால் பணிந்(து) அகலப்போமின்கள் எத்துணையும் சேய்த்தாக என்று அப்பர் சுவாமிகளும் தாம் அருளிய காலபாசத் திருக்குறுந்தொகைப் பதிகம் முழுவதும் நமனும் அவர்தம் தூதுவர்களும் இறைவன் அடியவர்களிடம் செல்லற்க என்று அறிவுரை கூறுவதாகவே அமைகின்றது. அப்பதிகத்தில் ஒரு பாடல். படையும் பாசமும் பற்றிய கையினீர் அடையன் மின்நம தீசன் அடியரை விடைகொள் ஊர்தியினான் அடியார்குழாம் புடைபு காதுநீர் போற்றியே போமினே தருமை ஆதீனம் பத்தாது குருமூர்த்திகளாகிய சிவஞான தேசிக சுவாமிகளும், ‘நல்லார்முன் நணுகாத யமதூதர்’ என்று தட்சிணாமூர்த்தி திருவருட்பாவில் அருளியுள்ளார்கள்.
|