6. கல்லாடர் இக் கல்லாடர் பற்றியும் சங்க காலத்தவர் பிற்காலத்தவர் என இருதிறப்படுத்துவர். இவர் ‘திருக்கண்ணப்பதேவர் திருமறம்’ என்ற ஒரேநூல் அருளியுள்ளார். இது 38 அடிகளைக் கொண்டுள்ளது. நக்கீரதேவரும் கண்ணப்பதேவர் திருமறம் அருளியுள்ளார். அவர் பாடல் நெடும்பாட்டு 158 அடிகளை உடையது. நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப என்ற தொடர்கள் நக்கீரர் திருமறத்திலேயே உள்ளன. 7. கபிலர் இவரைப் பற்றியும் இருதிறப்படுத்துவர். இவர் அருளிச் செய்த நூல்கள் மூன்று. அவை மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருஅந்தாதி என்பன. மூத்தநாயனார் என்பது இங்கு விநாயகரைக் குறிக்கின்றது. வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அடுத்தடுத்து இணைந்து வருவதால் இரட்டை மணிமாலை எனப் பெற்றது. வழிபடுவார்க்குத் திருவை ஆக்கும். செயல்களை விக்கினமின்றி நிறைவேற்றும். பேச்சுத் திறனும், பெருமையும் சேர்க்கும். அதனால் வானோரும் யானைமுகத்தானைப் போற்றிப் பயனுறுகின்றனர். இக் கருத்துள்ள முதல் பாடல், திருஆக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை 8. பரணர் இவர் பற்றியும் இருவேறு கருத்து உண்டு. இவர் “சிவபெருமான் திருவந்தாதி” என்ற ஒருநூல் அருளியுள்ளார். இந்நூல் 101 பாடல்கள் கொண்டது. 9. இளம்பெருமானடிகள் இளம்பெருமானடிகள் என்பவர் சிவபெருமான் திருமும்மணிக்கோவை என்னும் நூலை அருளியுள்ளார். இது
|