பக்கம் எண் :

139பொன்வண்ணத் தந்தாதி

234.சங்கரன் சங்கக் குழையன் சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட் படுமின், தொண் டீர், நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரவென் நெஞ்சம் எரிகின்றதே.

66


235.எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்(கு)அத் தீக்கிமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணியொக் கின்ற(து)அத் தோணியுய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள தாலத் திறலரவே.

67



இடப்பாதியில் காலில் பாடகம், மார்பில் விலை உயர்ந்த அணிகலம், சந்தனம், பொன்னரி மாலை, கையில் பந்து, மோதிரம், பூச்சூடிய கூந்தல் - இவ்வாறு உள்ளது.

குறிப்புரை: 'வலப்பாதி ஆணும், இடப்பாதி பெண்ணு மாய் உள்ளது' என்றபடி. 'இஃது ஒரு பெருவியப்பு' என்பது குறிப்பெச்சம். 'சிவபெருமானது உருவம், ஏனையோரது உருவம் போன்றதன்று' என்பதாம். அப்பர் பெருமானும், சிவபெரு மானது திருவடிகளை, "உருவிரண்டும் ஒன்றோடொன் றொவ்வா அடி"1 என்று அருளினார். செய்யுள் நோக்கிச் சிலவற்றை முறை பிறழ வைத்தார். "எரி" என்றது மழுவை. சலம் - நீர். தாழ்தல் - தங்குதல்.

234.பொழிப்புரை: தொண்டு மனப்பான்மை யுடையவர்களே, யமகிங்கரர்கள் (தூதுவர்கள்) சிவபெருமானுக்கு ஆட்படாதவர்கட்குச் செய்யும் இழிவான பல துன்பங்களை நூல்கள் வாயிலாகக் கேட்டவுடன் இவ்வுலகத்திற்றானே எனது மனம் ஆயிர அரங்களால் அராவுவது போலத் துன்பத்தால் வெதும்புகின்றது. ஆகவே, நீவிரும் பிற தொண்டுகளை விடுத்து, சுகத்தைச் செய்தலால், 'சங்கரன்' எனப் பெயர் சொல்லப்படுகின்ற, சங்கக் குழை யணிந்த செவியையுடைய சிவபெருமானுடைய திருவடித் தாமரையை அகங்கைகளைக் குவித்துக் கும்பிட்டு, அவனுக்கே ஆளாகித் தொண்டு செய்யுங்கள்.

குறிப்புரை: 'செய்தால், யமகிங்கரர் அணுகார்' என்பது குறிப்பெச்சம். மிறை - துன்பம். கீழாயின மிறை, அருவருக்கத் தக்க துன்பம்.

235. பொழிப்புரை: சிவபெருமானுக்கு அவனது சடை எரிகின்ற தீயைப் போலவும், அந்தச் சடையில் சூழல்கின்ற நீர் அந்தத் தீயை



1. திருமுறை - 6.6.6.