பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை144

242.குன்றெடுத் தான்செவி கண்வாய் சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த்(து) அற்றுகச் செற்றவன் அற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக் கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத் துறுகுழியே.

74



தொழுதவர்கட்கெல்லாம் பெரிய இவ்வுலகத்தையே பரிசிலாகக் கொடுத்து, உனது அடிக்கீழ் கிடக்கும் நாய்போன்ற, மாவடு ஒத்த கண்களையுடைய இவள் நின்னைத் தொழ, (இவட்கு ஏதும் கொடாமல்) இவள் அணிந்திருந்த வளையல்களையும் கொண்டுவிட்டாய். கொடியை உயர்த்துக் கட்டும் கயிற்றில் அறமாகிய இடபக் குறியை உயர்த்துள்ள குணமலைபோல்பவனே, எங்களைப் பொறுத்தமாட்டில் ஓர் ஊரில் இரண்டு இல்லங்களைக் காட்டுதல் போலும் செயலைச் செய்தாய்; (இது நீதியோ!)

குறிப்புரை: "அடிக்கண்ணி" என்பதில் ககா, ஒற்று எதுகை நோக்கி விரிந்தது. "கண்ணி" - நான்கில் முதலது 'கருதி' என்றும், இரண்டாவது, 'கண்களையுடையவள்' என்றும், மூன்றாவது, 'முடியில் அணியும் மாலை' என்றும், இறுதியது 'கயிற்று முடி' என்றும் பொருள் தந்தன. ஓர் ஊரில் இரண்டு சுகம் - 'வேண்டுபவர்க்கு' என்று எல்லா நலங்களும் நிறைந்த ஓர் இல்லமும், 'வேண்டாதவர்க்கு' என்று ஒன்றும் இல்லாத ஓர் இல்லமுமாக அமைத்தல். ஓர் இல்லமே யிருப்பின் வேற்றுமையில்லை. அதனால், 'இரண்டகம்' என்று சொன்னாலே, 'வேண்டாதவர்கட்கு' என்றுவேறு இல்லம் அமைப்பதையே குறித்தல் வழக்கு. 'உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதே' என்பர். நன்மை, அறம். "கொல்லேறு" என்றது இன அடை. 'ஏனையோர்க்கெல்லாம் அருள்செய்து, இவளைக் காதலால் வருந்தவிட்டாய்' என்பது கருத்து. இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது. 'மாணிக்க வாசகர் போலச் சிவனை அடைதலில் வேட்கை மிக்காரைச் சிவன் இவ்வுலகத்தில் வைத்தல் என்னை' என உலகத்தார் இரங்கி ஆராய்தல் இதன் உள்ளுறை.

242. பொழிப்புரை: தான் வீற்றிருக்கும் மலையைப் பெயர்த்த இராவணனை அன்று அவன் தனது காது, கண், வாய், தலை எல்லாம் நெரிந்து அவன் 'ஓ' என்று அலறும்படி அடர்த்து, அவனது அகங்காரம் முழுதும் அற்றொழிய அவனை ஒறுத்தவனும், மற்றுப் பற்றுக்கள் எல்லாவற்றையும் விட்டுத் தன்னையே பற்றாகப் பற்றுவோர்க்குத் தானும் தன் பெருமை களை யெல்லாம் விட்டு அவர்க்கு இரங்கி வந்து எவ்வகையிலும் நலம் புரிபவனும் ஆகிய 'சிவன்' என்னும் அருநெல்லிக்கனி வெளியிடத்திலே தோன்றி நிற்க, மக்கள் அதனை உண்ணாமல் தமக்கு எளிதில் தெரிந்ததை எடுத்துச் சொல்லி இறப்பிற்கு ஆளாகிப் பின்பு மிக ஆழ்ந்த குழியாகிய நரகத்திலும் வீழ்கின்றனர்.