பக்கம் எண் :

145பொன்வண்ணத் தந்தாதி

243.குழிகண் கொடுநடைக் கூன்பற் கவட்டடி நெட்டிடையூன்
உழுவைத் தழைசெவித் தோல்முலைச் சூறை மயிர்ப்பகுவாய்த்
தெழிகட் டிரைகுரல் தேம்பல் வயிற்றுத் திருக்குவிரற்
கழுதுக் குறைவிடம் போல் கண்டன் ஆடும் கடியரங்கே.


குறிப்புரை: 'இஃது அவரது அறியாமையின் நிலை' என்பது குறிப்பெச்சம் 'நிக்கிரகமும், அநுக்கிரகமும் செய்யவல்ல முழுமுதல்' - என்பதை முதல் இரண்டடிகள் குறித்தன. "அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய்"1 என்ற திருஞானசம்பந்தர் திருமொழி காண்க. சிவன், அற்றவர்க்கு அற்றவன் ஆதலை, வன்றொண்டருக்கு இருமுறை தூது நடந்தமை முதலியன பற்றி அறிக. செவி, கண் முதலியவற்றை விதந்தோதியது. அவை அளவின் மிக்கிருந்தமை குறித்தற்கு. நெல்லிக்கனி, ஒளவை உண்ட நெல்லிக்கனி போல்வது. 'சிவனை அடைந்தால் இறப்பில்லை' என்பதை அது குறித்தது. ஒன்று - எளிதாகிய ஒன்று. அது சிவனது கோலம். 'அந்தக் கோலத்தின் மெய்ம்மையறியாது இகழ்ந்து, நரகுறுகின்றனர்' என்றபடி. 'உறுகுழி நரகத்துப் புகுவர்' என மாற்றி யுரைக்க. உறு - மிகுதி.

243.பொழிப்புரை: யாவர்க்கும் தலைவனாகிய சிவன் ஆடுகின்ற விளக்கமான அரங்கமாவது, ஆழமான கண்களை யும், வேகமான நடையினையும், வளைவான பிளவுபட்ட பாதங்களையும் நீண்ட இடையுனையும், ஊன் தின்னும் புலி தொங்குகின்ற விரிந்த செவிகளையும், வெறுந் தோலாய்த் திரைந்த கொங்கைகளையும், பரட்டை மயிரினையும், பிளந்த வாயினையும், 'கட்டு, உதை' என்று அதட்டி இரைகின்ற குரலையும், ஒட்டிய வயிற்றையும், முறுக்கிய விரல்களையும் உடைய பேய்களுக்கு உரிய உறைவிடந்தான்போலும்!

குறிப்புரை: 'வேறு இடம் இல்லையோ' என்பது குறிப்பெச்சம். 'இங்குக் குறிக்கப்பட்ட இடம் முதுகாடு' என்பது தெளிவு. 'முதுகாடு' என்பது உண்மையில் அனைத்தும் ஒடுங்கிய முற்றொடுக்க நிலையையும், 'பேய்கள்' என்பது அந்நிலையில் நிகழும் மூன்றுவகையான கேவல நிலையில் நிற்கும் ஆன்மாக் களையும் குறிக்கும். அக்கேவலங்களைச் சிவஞான யோகிகளது சிவஞான போத ஆறாஞ் சூத்திரச் சிற்றுரையால் அறிக. இந்நுட்பம் உணரமாட்டாதார் சிவனை உலக முதுகாட்டில் ஆடுபவனாகவே வைத்து இகழ்வர். அவர் அவ்வாறு இகழ் தலையே தாம் இகழ்வதுபோலக் கூறினார். "போல்" என்ற தனால், அவனுக்குப் பொன், வெள்ளி, மணி முதலிய நல்லரங்கு களும் உள என்பதனைக் குறிப்பால் உணர்த்துதலும் செய்தார். 'சிவன் ஆடுவது சுடுகாட்டில்'



1. திருமுறை - 3.120.2.