பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை164

முன்னிலைப் புறமொழி வகையால் தலைவனது இயல் புணர்ந்து தலைவி ஆற்றுதல்.

பொழிப்புரை; பொருள்வயிற் சென்ற தலைவர் குறித்த கார்ப் பருவமும் யாவரும் அறிய வந்திறுத்தது. அதனால் ஆற்றாமை காரணமாக இவளும் (தலைவியும்) மற்றொரு முகிலின் தன்மையை எய்தினாள்; தலைவர் தலைவியிடத்து மாறாக் காதலராயினும் (குறித்தபடி வாராமையால்) அவர் மனம் கல்லுப்போல வலிதாகிவிட்டதோ!

குறிப்புரை: “விரிந்த கடல் நீரைத் தான் முற்றப் பருகிய தனால் அது சேறாயிற்றுப் போலத் தோன்றுதற்கு ஏதுவான கரிய மேகம் மலைமுகட்டில் ஏறி நுண் துளி பொழிய, அதனை நேரே கண்டு, தலைவி தானும் தனது காதணியாகிய மின்னல் மின்ன, புருவமாகிய வானவில்லைத் தோற்றுவித்து, விளங்குகின்ற எழிலையுடைய தனது சிவந்த வாயாகிய, ‘இந்திரகோபம்’ என்னும் வண்டு ஊர்தர, ‘அகங்கைகள்’ என்னும் காந்தட் பூக்கள் விரிய, முத்துப்போல விளங்குகின்ற பற்களாகிய முல்லை அரும்புகள் அரும்ப, கூந்தல் கொன்றைக் காயையும், தேமல் கொன்றைப் பூவையும், எழுச்சியையுடைய சாயல் மயிலையும் தோற்றுவிக்க, உள்ளிருந்து வெளிவரும் நெட்டுயிர்ப்பாகிய காற்று உடன் வீச, தனது கண்ணீராகிய பெருமழையைப் பொழிந்து, அதனானே கண்ணில் உள்ள மையாகிய கொழுவிய சேறு அலம்பப்பட்டு, அந்நீராகிய அருவி தன் கொங்கைகளாகிய மலைகளுக்கு இடையே, மாணிக்கம், பொன், குற்றம் அற்ற வைரம், அழகு மிகுந்த அகில், சந்தனம் இவைகளைத் தேய்த்து ஒழுகுதலால் மற்றொரு மேகமாம் தன்மையை விளக்கினாள், தலைவர் காதலுடை யாராயினும், (வந்து சேராமையால் அவர் மனம் இப்பொழுது கல்லாகிவிட்டதோ!” எனப் பொருள் உரைத்துக் கொள்க.

“தவிர்த்த” என்னும் பெயரெச்சம், “சடை” என்பத னோடு முடிந்தது. ‘அண்ணலுக்கு’ என நான்காவது விரிக்க. பலி சொரியும் கல், பலிபீடம், பலி சொரியப்படும் கல் வலிதாதலோடு, பலியொன்றற்கன்றி பிறிதொன்றற்கு இடமாகாமையால் அதுவே கைப்பொருளுக்கன்றிப் பிறிதொன்றற்கு இடமாகாத மனத்திற்கு உவமையாயிற்று.

பொருளே காதலர் காதல்
அருளே காதல் என்றி நீயே

என்னும் அகப்பாட்டினையும் காண்க. இப்பாட்டு உரிப் பொருளாற் பாலையாயிற்று. இது நேரிசையாசிரியப்பா.