பக்கம் எண் :

165திருவாரூர் மும்மணிக்கோவை

வெண்பா

270.

மனம்மால் உறாதேமற் றென்செய்யும்! வாய்ந்த
கனமால் விடையுடையான் கண்டத்(து) - இனமாகித்
தோன்றினகார்; தோன்றிலதேர்; சோர்ந்தனசங்(கு); ஊர்ந்தனபீர்;
கான்றனநீர் ஏந்திழையாள் கண். 2

கட்டளைக் கலித்துறை

271.

கண்ணார் நுதல்எந்தை காமரு கண்டம் எனவிருண்ட
விண்ணால் உருமொடு மேலது கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயில் ஆல்மட மான்அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க் கழியும் பிரிந்துறைவே. 3


270. பொழிப்புரை: (தலைவர் குறித்துச் சென்ற கார்ப் பருவம் வந்துவிட்டமையால்) பெருமை பொருந்திய திருமாலாகிய இடபவாகனத்தையுடை சிவபெருமானது கண்டத்திற்கு ஒத்த வகையினை யுடையவாய் முகில்கள் கண் முன்னே தோன்றிவிட்டன. ஆயினும் தலைவர் ஊர்ந்து சென்றதும், சேமமாகக் கொண்டு சென்றவும் ஆகிய தேர்கள் எம் கண்முன் தோன்றவில்லை. ஆகவே, இவளுடைய (தலைவியுடைய) மனம் மயக்கம் கொள்ளாது என் செய்யும்! (ஒன்றையும் செய்யமாட்டாது. ஆகையால்) இவள் கையில் உள்ள சங்க வளையங்கள் கழன்று வீழ்ந்தன; மேனி முழுதும் பசலைகள் போர்த்தன; கண்கள் நீராய்ப் பொழிந்தன.

குறிப்புரை: ‘இனி இறந்துபடுவாள் போலும்’ என்பது குறிப்பெச்சம். இது பருவங் கண்டு ஆற்றாளாய தலைவியது நிலை கண்டு தோழி வருந்திக் கூறியது. இதுவும் உரிப் பொருளாற் பாலையே. ‘கனம் வாய்ந்த மால்’ என மாற்றிக் கொள்க.

271. பொழிப்புரை: மேகம், ‘கண் பொருந்திய நெற்றியை யுடைய எம் தந்தையாகிய சிவபெருமானது அழகிய கண்டம்’ என்று சொல்லும்படி இருண்டு, தனக்கு இடமாகிய விண்ணின்கண் இடியுடன் மேலே உளதாயிற்று. விசாலித்த நிலத்தின்கண் மலையிடத்து இளமையான மயிலின் ஆட்டம் கீழே உளதாயிற்று. (எனவே,) விண்ணும், மண்ணும் கார்ப் பருவம் வந்ததைத் தெளிவாகக் காட்டி நிற்றலால்) இளைய மான்போலும் பெண்ணாகிய இவள் தலைவனைப் பிரிந்து உறையும் தனிமை இனி என்னாய்க் கழியுமோ!

குறிப்புரை: ‘இறந்துபாடாய்க் கழியுமோ’ என்றபடி “இருண்ட” என்னும் பெயரெச்சம் “விண்” என்னும் இடப் பெயர் கொண்டது.