அகவற்பா 272. | உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும் அறைகுரல் முரசம் ஆர்ப்பக்; கைபோய் வெஞ்சிலை கோலி, விரிதுளி என்னும் மின்சரந் துரந்தது, வானே; நிலனே, | 5 | கடிய வாகிய களவநன் மலரொடு கொடிய வாகிய தளவமும், அந்தண் குலைமேம் பட்ட கோடலுங் கோபமோ(டு) அலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு காயா வெந்துயர் தருமே; அவரே | 10 | பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக் கங்குலும் பகலும் காவல் மேவி மாசறு வேந்தன் பாசறை யோரே; யானே இன்னே அலகில் ஆற்றல் அருச்சுனற்(கு) அஞ்ஞான்(று) | 15 | உலவா நல்வரம் அருளிய உத்தமன் அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழா மயரிய மாக்களைப் போலத் துயருழந் தழியக் கண்துயி லாவே. 4 |
‘இருண்டு’ என்றே பாடம் ஓதலும் ஆம். விண்ட - அகன்ற. ஆல் - ஆலுதல்; முதனிலைத் தொழிற் பெயர். ‘கொண்டல் மேலது; மயில் ஆலுதல் கீழது; இனி என்னாய்க் கழியும்’ என்க. இதன் திணையும், துறையும் மேலனவே. 272. பொழிப்புரை: வானம்; தன்னிடத்து உள்ள மேகங்களின்வழி மின்னலாகிய ஒளி பொருந்திய வாளை உறையினின்றும் உருவி வீசி, இடி முழக்கமாகிய போர்முரசம் ஒலிக்க, எவ்விடமும் அகப்படக் கொடிய வில்லை (வான வில்லை) வளைத்து, எங்கும் நிறைந்த மழைத் தாரைகளாகிய வெள்ளிய அம்புகளை ஏவிப் போர்புரியாநின்றது; நிலம், கடிய களாமலர், கொடிய முல்லை மலர், குலையாக மேம்பட்ட அழகிய, குளிர்ந்த வெண்காந்தள் மலர், அலைவால் மேம்பட்ட செங்காந்தள் மலர், ‘இந்திர கோபம்’ என்னும் வண்டு காயா மலர் இவைகளுடன் கூடி கொடிய துன்பத்தைத் தாராநின்றது. அவரோ (தலைவரோ) பகை மன்னரது காவல் மிக்க அரணை, வெளி வருவாரையும், உட்புகுவாரையும் அவற்றைச் செய்யாதவாறு தடுத்து முற்றுகை யிட்டு, இரவும் பகலும் காவல்
|