பக்கம் எண் :

17மூத்த திருப்பதிகம் - 2

19.நொந்திக் கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருத்தங் குறங்குஞ் சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின் ஓசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே. 

7

 

20.வேய்கள் ஓங்கி வெண்முத் துதிர வெடிகொள் சுடலையுள்
ஓயும் உருவில் உலறு கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டில்
மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே. 

8

 

21.கடுவன் உகளுங் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் டலையும் ஈமப் புகையும் எழுந்த பெருங்காட்டில்
கொடுவெண் மழுவும் பிறையுந் ததும்பக் கொள்ளென்றிசைபாடப்
படுவெண் துடியும் பறையுங் கறங்கப் பரமன் ஆடுமே. 

9

 

19. அ. சொ. பொ.: நொந்திக் கிடந்த - சில நாள் ஏம் இன்றிக் கிடந்த. தடவி - துழாவி. புழுக்கு - புழுக்கல்; சோறு. சிந்தித்து - கவலையடைந்து. சிரமம் - துன்பம். ‘அந்தியில்’ என ஏழாவது விரிக்க.

20. அ. சொ. பொ.: வேய்கள் - மூங்கில்கள். ‘ஓங்கி வெடிகொள், உதிர வெடிகொள் சுடலை’ என்க. ஓய்தல் - இளைத்தல். உலறுதல் - காய்தல். பகுவாய் - பிளந்த வாய் அணங்கும் - வருந்தும் ‘பேய்களின் வாழ்க்கை துன்ப வாழ்க்கை’ என்றபடி. மாயம் - கள்ளத் தன்மை; வேட மாத்திரத்தில் பல பெற்றியனாகத் தோன்றுதல் அப்பன் நடனத்தை அம்மை காணுதலை இத்திருப்பாட்டில் குறித்தருளினார். மருட்சி - வியப்பு.

21. அ. சொ. பொ.: கடுவன் - ஆண் குரங்கு. உகளும் - கிளைகளில் பாய்கின்ற. கழை - மூங்கில், பொதும்பு - புதர். இடுதல் - புதைத்தல். ‘புதைத்ததனால் உண்டான வெண்டலை’ என்க. ஈமம் - பிணஞ் சுடும் விறகு. வெண்டலையை “எழுந்த” என்றது, ‘குழியினின்றும் வெளிப் போந்த’ என்றபடி. மழுவுக்கு வெண்மை கூர்மையாலும், துடிக்கு வெண்மை அதன் தோலி னாலும் ஆகும். ததும்ப - ஒளி வீச. கெள்ளெனல், ஒலிக் குறிப்பு. எனவே, ‘அங்ஙனம் பாடுவன பூதங்கள்’ என்பது பெறப்பட்டது. படுதல் - ஒலித்தல். துடி - உடுக்கை. கறங்குதல் - ஒலித்தல். துடி, இறைவனது. பறை, தேவர்களது.