22. | குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய் இண்டை படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய் கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென் றிசைபாட மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே. | | 10 |
23. | சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம் ஆடும் அரவம் அரையில் ஆர்த்த அடிகள் அருளாலே காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன் பாடல் பத்தும் பாடி யாடப் பாவம் நாசமே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
22. அ. சொ. பொ.: குண்டு - ஆழம், ஐ, சாரியை. ‘குறியனவாயும், சிறியனவாயும், நெடியனவாயும் பிறங்குதலை யுடைய பேய்’ என்க. பிறங்குதல் - விளங்குதல். இண்டு இண்டை; இண்டங் கொடி. வெருட்டுதல் - அச்சுறுத்தல். “பேய்” இரண்டையும் பன்மையாகக் கொள்க. பிள்ளைப் பேய்களைத் தாய்ப் பேய்கள் இருட் காலத்தில் தடவிக் கொடுத்து, ஆயினும் அச்சுறுத்தி, அவை குறும்பு அடங்கி அமைதியுற்றிருக்க இசை பாடின என்க. முதலில் உள்ள “பேய்” என்பதில் இரண்டன் உருபு விரிக்க. எரிவாய்ப் பேய் - கொள்ளி வாய்ப் பேய். கொள்ளென்று இசைபாடுதல் முன் பாட்டிலும் வந்தது. ‘குழவியாக’ என ஆக்கம் வருவிக்க. மிண்டுதல் - நெருங்குதல். 23. அ. சொ. பொ.: ‘திருநட்டமாகச் சுழல்வார் என ஆக்கம் விரித்து, மாறிக் கூட்டுக. ‘அருளாலே பாடிய’ என ஒரு சொல் வருவிக்க. இதனால் அம்மையார் பாடல்கள் அருள்வழி நின்று அருளிச் செய்தனவாதல் அறிந்து கொள்ளப்படும். காடு மலிந்த - காட்டை மகிழ்ந்து அங்கு வாழ்கின்ற. அம்மையார் தமது பணிவு தோன்ற மற்றைப் பேய்களைப் போலவே தம்மை வருணித்துக் கொண்டார். ஆடுதல், பாடற் பொருள் விளங்கச் செய்கை காட்டி நடித்தல். மூத்த திருப்பதிகம் - 2 முற்றிற்று
|