பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை172

வெண்பா

279.பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத்(து) எள்க
எழுது கொடியிடையாய், ஏகான்; - தொழுதமரர்
முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னுஞ்சேய் போல்ஒருவன் வந்து. 

11

கட்டளைக் கலித்துறை

280.வந்தார்; எதிர்சென்று நின்றேற்கு ஒளிரும்வண் தார்தழைகள்
தந்தார்; அவையொன்றும் மாற்றகில் லேன்;தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச் சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா வனத்துக் குளிர்புனத்தே.

279. பொழிப்புரை; தேவர்கள் வணங்கித் தனது சந்நிதியை அடைகின்ற, நெருங்கிய கழல் அணிந்த திருவடியை உடையவனும், மூன்று கண்களை உடையவனும், நான்கு வேதங்களின் முதல்வனும் ஆகிய சிவபெருமான்றன் மைந் தனாகிய முருகன்போன்ற ஒருவன் நமது அழகிய புனத்திலே வந்து, பொழுது போய்விட்டாலும் தான் போகாது, யாவரும் இகழும்படி காத்து நிற்கின்றான்; ஓவியத்தில் எழுதப்பட்டது, போன்ற அழகுடைய கொடிபோலும் இடையை உடை யவளே!

குறிப்புரை: ‘அவனுக்கு நான் என்ன சொல்வது’ என்பது குறிப்பெச்சம். இது, தலைவனை மடல் விலக்கி அவனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவியிடம் சென்று மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தது. இதுவும் குறிஞ்சியே.

280. பொழிப்புரை: (தோழீ!) தக்கன் வேள்வியை அழித்த, செந்தாமரை மலர்போலும் நிறத்தையும், கங்கையைத் தரித்த சடையையும் உடைய சிவபெருமானது திருச்சிராமலையின் கண், பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டு, நமக்கே உரித்தாய் நாம் சென்று விளையாடுகின்ற நந்த வனத்தின் நடுவிலே நாம் இருக்கின்ற புனத்தின்கண் ஆடவர் ஒருவர் தனியே வந்தார். (‘இஃது என்’ என்று வினாவ) யான் அவன் எதிரே சென்றபொழுது அவர் அழகிய மாலையையும், தழையையும் (‘இவை எங்கும் கிடைத்தற்கு அரிய’ என்று சொல்லித்) தந்தார். அவற்றுள் ஒன்றையும் யான் மறுக்க மாட்டாதவளாய் வாங்கிக் கொண்டேன்.

குறிப்புரை: இதுவும் மேற்கூறிய வகையில் தழை ஏற்பித்தது.