| கள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சி எம்மில் லோயே, பாண அவனேல் அமரரும் அறியா ஆதிமூர்த்தி குமரன் தாதை குளிர்சடை இறைவன் | 15. | அறைகழல் எந்தை ஆருர் ஆவணத் துறையில் தூக்கம் எழில்மென் காட்சிக் கண்ணடி அனைய நீர்மைப் பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே. | | 19 |
பெட்டைக் குருவி கரு முதிர்ந்து முட்டையிடும் காலத்தை அடைந்திருப்பதை உணர்ந்து அது தங்கி முட்டையிடுவதற்கு உரிய கூடு ஒன்றைக் கட்ட வேண்டி, அப்பெட்டையின் மேல் உளதாகிய அன்பு மிகுந்து தனக்குச் சுமையாதலால், பெட்டை மனம் வருந்தாதபடி அதனை அடிக்கடி தழுவி மகிழ்ச்சி உண்டாக்கிக் கொண்டு பக்கத்து வயலில் கணு முற்றி வளர்ந் திருக்கின்ற கரும்பின் சிறிய சோனைகளில் நார் உரிக்கின்ற வயல் வளம் மிகப் பொருந்திய, பெருமை நிறைந்த இல்லங் களையும், எப்பொழுதும்வற்றாது வரும் நீரினையும் உடைய ஊரை உடையவன் உன் தலைவன். அவன் கட்டி வைக்கும் பார்வை மிருகமாய், இளைய கொடிபோல்பவராகிய மகளிரை அவன் வலையில் வீழ்க்க வந்து, வஞ்சக வார்த்தைகள் பலவற்றை இனிமையாகச் சொல்லி, உள்ளத்தில் உள்ள உண்மையை முற்றிலுமாக மறைத்துத் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டு, கள்ளக் கும்பிடு போட்டு, (‘தலைவர் இங்கு உள்ளாரோ’ எனப் பொய்யாக வினவிக் கொண்டு) எங்கள் இல்லத்திலே வந்து நின்கின்றாய். (அவன் செய்தியை நீ அறியாயோ? அவன் இங்கா இருப்பான்?) அவனோ அமரரும் அறியா ஆதி மூர்த்தியும், முருகன் தந்தையும், நீரால் குளிர்ந்த சடையை உடைய இறைவனும், ஒலிக்கும் கழலை அணிந் தவனும், எம் தந்தையும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாரூர்க் கடைத் தெருவில் கடைகளில் தொங்க விடப்பட்டுள்ள அழகிய தோற்றத்தையுடைய கண்ணாடிகளைப் போன்ற தன்மையை உடைய, பண்போல இனிமை யாகப் பேசுகின்ற அத்தகைய பெண்டிர் இல்லங்களில் இருக்கின்றான். குறிப்புரை: கண்ணாடி போன்ற தன்மையாவது அருகில் வந்தோர் யாராயினும், ‘இன்னார், இனியார்’ என்னும் வரையறையின்றி உடனே அகத்திட்டுக் கொள்ளுதல். எனவே, ‘இந்நீர்மை யுடையோர் வரைவின் மகளிர்’ என்பது உணர்த்தியவாறு. இது, தலைவியை வாயில் வேண்டிய பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது. திணை, மருதம்.
|