வெண்பா 291. | நீயிருந்திங் கென்போது; நெஞ்சமே, நீளிருட்கண் ஆயிரங்கை வட்டித் தனலாடித் - தீயரங்கத்(து) ஐவாய் அரவசைத்தான் நன்பணைத்தோட் கன்பமைத்த செய்வான தூரன் திறம். | | 23 |
பின் எனது ஒக்கலிலே வந்து அமரும், விளங்குகின்ற, சிறிதே வளர்ந்த தலைமயிரையும், மழலைச் சொல்லையும் உடைய என் பிள்ளையை யான் நினைத்தனால் சுரந்து பொழிந்த வெள்ளம்போலும் இனிய பாலை உடையனவாய்விட்ட என் பருத்த, மெல்லிய கொங்கைகளை வெறுத்து பிரிந்து போய்விட்ட, மிக்க நீரையுடைய ஊரையுடைய தலைவனது அணிகலம் பொருந்திய மார்பினை, ‘யான் வலியச் சென்று தழுவுவேன்’ என்று முயன்று, (அஃது இயலாமையால்) பெரிதும் பேதைமை யுடைய ஆயினாய்; நீ வாழ்வாயாக. (இனி அது வேண்டா) தான் தனது நீண்ட சடையிலே அணிந்துள்ள, வளைந்த, வெள்ளிய திங்களினது செழித்த நிலவோடொக்கும் சுடுவெண் பொடியை அணிந்து ஒளிவிடுகின்ற மார்பினையுடைய பெருமானது திருவாரூரில் வாய்க்கால்களில் உறுதியாகக் கட்டப்பட்ட மடைகளில் அப்பாற் செல்லாமல் தன் மேகம் தடையுண்டு நிற்கின்ற மிக்க நீர்போல, உறுதிப்பாட்டுடன் என்னிடத்திற்றானே நீங்காது நில். குறிப்புரை: இது புதல்வற் பயந்து தன்தலைக்கடன் இறுத்து வாழும் தலைவி, தலைவன் பரத்தையிற் பிரிந்த வழி ஆற்றாமையால் அவன் உள்வழிச் செல்ல நினைத்து, நாண் தடுத்தலால் அஃது இயலாது நின்ற நெஞ்சினைக் கழறிக் கூறியது. இது, “புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரம்’ என்பதன் பகுதியாம். இதுவும் மருதத் திணை. தாழ்தல் தங்குதல். 291. பொழிப்புரை: நெஞ்சே, நம் தலைவனது செயற் கூறு, நெடிய இருளிடத்து தீ எரிகின்ற அரங்கத்தின்கண், தீயின் நடுவே நின்று கைகள் ஆயிரத்தைச் சுழற்றி ஆடி, ஐந்தலை நாகத்தைக் கட்டியுள்ள சிவபெருமானது அழகிய தோள் களினிடத்து அன்பை அமைத்த செயல்களைச் செய்வதாயிற்று நீ இங்கு இருந்து பெறுவது என்! என்னுடன் வா, போவோம். குறிப்புரை: ‘நெஞ்சமே, ஊரன் திறம் அரவு அசைத்தான் தோட்கு அன்பு அமைத்த செய்வு ஆனது; நீ இங்கு இருந்து என்! போது’ என இயைத்து முடிக்க, ‘தோட்கு, தோட் கண்’ என உருபு மயக்கம். அமைத்த - அமைத்தன. அமைத்தனவாகிய செயல்கள்.
|