பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை184

வெண்பா

294.ஊரெலாந் துஞ்சி, உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண் - சீரூலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைக்காட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள். 

26

கட்டளைக் கலித்துறை

295.புள்ளுந் துயின்று பொழுதிறு மாந்து கழுதுறங்கி
நள்ளென்ற கங்குல் இருள்வாய்ப் பெருகிய வார்பனிநாள்
துள்ளுங் கலைக்கைச் சுடர்வண் ணனைத்தொழு வார்மனம்போன்(று)
உள்ளும் உருக ஒருவர்திண் தேர்வந் துலாத்தருமே. 

27



புறமொழியாற் கழறிக் கூறியது. இதன் பயன் உடன்போக்காதலின் இது நெய்தலிற் பாலையாயிற்று. நிலவு, செக்கர், தாரகை என்பவற்றைச் சங்கு முதலிய மூன்றனோடு நிரலே இயைக்க. “தண்ணந் துறைவன் . . . கொள்கைபோல” என்றதனை,

கண்டது மன்னும் ஒருநாள்; அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.1

என்பதனோடு ஒப்பு நோக்குக. ‘போலச் சிறந்தது’ என்பது பாடம் அன்று.

294. பொழிப்புரை: ஊர் முழுதும் உறங்கி, உலகம் முழுது நள்ளிரவு நிலையை அடைந்து, மண் முழுதிலும் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒலி அடங்கிய இப்பரந்த இருளிடத்து, (தோழீ! என்ன காரணமோ) அழகு பொருந்திய திருமாந் துறையில் உள்ள ஈசனுக்கு உரித்தாய் உள்ள திருமறைக் காட்டில் உள்ள நீல மணிபோலும் நீரினது துறையில் நிரம்ப இரைமேய்ந்த பின்னும் அதில் உள்ள பறவைகள் உறங்காமல் ஆரவாரிக்கின்றன.

குறிப்புரை: செய்தென் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. இஃது இரவுக் குறிக்கண் தலைவன் வந்தமையைத் தோழி தலைவிக்கு அவள் அறியுமாற்றாற் கூறியது. புட்கள் உறங் காமல் எழுந்து ஆரவாரித்தல் தலைவன் தான் வந்தமை குறிக்கும் குறியாக எழுப்புதலினாலேயாம் இது குறிஞ்சித் திணை.

295. பொழிப்புரை: பறவைகளும் துயின்று, ஞாயிறு தன் கதிரும் தோன்றாமல் மறைந்து, பேயும் உறங்கி, இவ்வாறு ‘பாதி’ என உணரப்படுகின்ற இரவில், இருளிலே, மிக்கு ஒழுகும் பனிக் காலத்தில்,


1 திருக்குறள் - 1146.