சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த 8. திருக்கைலாய ஞானஉலா 299. கலிவெண்பா திருச்சிற்றம்பலம் தலைவன் புகழ் கண்ணி - 1 | திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா(து) அங்கண் அருமால் உற;அழலாய் நின்ற - பெருமான் |
299. ‘உலா’ என்னும் பிரபந்தம் பற்றிய இலக்கணக் குறிப்புத் தொல்காப்பியத்தில், “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப”1 என்னும் நூற்பாவாற் பெறப்பட்டது. அஃதாவது, “தலைவன் ஒருவனைப் பாடாண் பகுதியால் பாடக் கருதும் புலவர், அவன் தன் ஊரில் உலாப்போதுங்கால் அவ்வுலாவில் அவனைக் கண்டு, பேதை முதல் பேரிளம்பெண் ஈறான எழுவகைப் பருவத்து மகளிரும் காதல் கொண்டதாகக் கற்பித்துப் பாடப்படுவது - உலா - என்னும் பிரபந்தம்” என்பதாம். ‘இங்ஙனம் காதல் கொண்டு வருந்தினாராகக் கூறப்படுவோர் பொது மகளிரேயன்றிக் குல மகளிர் அல்லர்’ என்பது மேற்காட்டிய அந்நூற்பாவில், “வழக்கொடு சிவணிய வகைமை யான” என்றதனால் பெறப்படும் என்பது அதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையான் விளங்கும். ‘உலாக் கலிவெண்பாவானே பாடப்படும்’ என்பர். பஃறொடை வெண்பாவே பிற்காலத்தில் ‘கலி வெண்பா’ என்னும் மரூஉ வழக்கைப் பெற்றது. அதனால், ‘கைலைப் பெருமானைப் பற்றிய உலா’ ஆதலின், ‘கைலாய உலா’ என்றும், வெளிநோக்கில் காமம் பொருளாக வந்தது போலத் தோன்றினும் உள்நோக்கில் ஞானம் பொரு ளாகவே வந்தமையால் ‘ஞான உலா’ என்றும் பெயர்பெற்றது.
1. திருவாசகம் - சிவபுராணம்
|