பெருமைகளைச் சிவபெருமான் இயற்கையாகப் பெற்றுள்ளான்’ என்பது பலவகையில் கூறப்படுகின்றது. தோன்றுதல் - உளன் ஆதல். பிறர் எல்லாம் கால வயப்பட்டு ஒருகாலத்திலே பிறத்தலால் உளர் ஆகின்றனர்; சிவபெருமான் அவ்வாறின்றி, என்றுமே உளனாய் இருக்கின்றான். எனவே, காலம் அவனுக்கு உட்படுகின்ற தேயன்றி அவன் காலத்திற்கு உட்படுகின்றானில்லை. பிறர் எல்லாம் கண்ணைக் கருவியாகக் கொண்டு அது வழியாகவே பொருள்களைக் காண்கின்றனர்; சிவபெருமான் அவ்வாறின்றிப் பொருள்களை நேரே காண்கின்றான். ‘பிறர் எல்லாம் பொருள்களைக் கண் காட்டும் அளவில், அது காட்டியவாறு காண்பர்’ என்பதும், ‘சிவபெருமான் அவ்வாறின்றி, எல்லாவற்றையும் உள்ளபடி காண்பான்’ என்பதும் விளங்கும். கட்புலத்திற்குச் சொல்லியது ஏனைச் செவிப்புலம் முதலியவற்றிற்கும் ஒப்பதே. பிறர்க்கெல்லாம் உடம்பு அறிவு இச்சை செயல்கட்கு இன்றிமையாதது ஆதலின் வேண்டப்படுவதாயினும் அதனால் நிகழும் அறிவு முதலியன பிறவிக்குக் காரண மாதலின் பந்தமாய், அவரால் முயன்று துறக்கப்படுவதாக, சிவனது அறிவு இச்சை செயல்கட்கு உடம்பு வேண்டாமையின் அவன் உடம்போடு கூடிநின்றே அதனாற் பந்தம் உறாது இருக்கின்றான். சிவபெருமான் எப்பக்கத்திலும் வரம்பின்றிப் பரந் துள்ளவன் ஆதலின் ‘ஆழம், அகலம், உயரம்’ என்பவைகளில் இயல்பாகவே எந்த வகையிலும் ஓர் அளவு இல்லாதவன். ‘பிறர் எல்லாம் மேற்குறித்த அளவுகளில் சிறியராய்த் தோன்றிப் பெரியராய் வளர்வர். சிவபெருமான் அன்ன தன்மையில்லாதவன் என்பது, “ஆழாது, அகலாது, ஊழால் உயராது” என்னும் சொற்களால் குறிக்கப்பட்டது. ஊழ் - முறைமை. விரிந்து பரந்த அறிவைத் தரும் நூல்களை அவன் அவை தோன்றியபின் ஓதி உணராமல் என்றுமே உணர்ந்திருக் கின்றான், என்றது. ‘அவற்றின் பொருளை அவன் தானே இயல்பாக உணர்ந்திருக்கின்றான்’ என்றபடி. எனவே, ‘அனைத்துப் பொருள்கட்கும் முதல் நூலைச் செய்தவன் அவனே’ என்றதாயிற்று. சிவபெருமான் முன்பு பரியனாய் இருந்து பின்பு நுணுகி நுணுகித் தீர நுணுகுதல் இன்றி, இயல்பிலே தீர நுணுகி யிருப்பவன். எனவே, ‘அவனிலும் நுணுகிய பொருள் ஒன்று இல்லை’ என்பதாயிற்று. ‘அவனிலும் பரிய பொருளும் எதுவும் இல்லை’ என்பது மூன்றாம் கண்ணியில் சொல்லப்பட்டது.
|