9. | சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப - ஆராய்ந்து |
10. | செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப - அங்கொருநாள் |
எந்தப் பொருளையும் புதிதாக ஒருகாலத்தில் அணுகாது, இயல்பாகவே எல்லாப் பொருளிலும் அது அதுவாய்க் கலந்து நிற்கின்றான். சிவபெருமான் சுத்த மாயையில், தானே, ‘அயன், அரி, அரன்’ - என்னும் மும்மூர்த்திகளாய் நின்று, படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்வான். எனவே, ‘அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் தன் அருள்பெற்றவரை அயன்முதலிய பதவியினராகச் செய்து, அவர்கள் வழியாகப் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்விப்பன்’ என்பது போந்தது. சிவபெருமான் தானே கொள்ளும் வடிவங்கள் ‘சம்பு பக்கத்தின’ என்றும், பிறருக்கு அவனால் தரப்படும் அவ்வடி வங்கள் ‘அணு பக்கத்தின’ என்றும், சொல்லப்படும். சிவபெருமான் எல்லாரினும் மேலாய்த் தேவர்களாலும் அறியப்படாத காட்சியை உடையவன். தேவரை யெல்லாம் தான் விரும்பிய வண்ணம் படைத்து அவ்வத்தொழிலில், நிறுத்தினான். எவர் ஒருவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடையறாது தியானிக்கின்றார்களோ அவருக்கு அந்த உருவமாய்த் தோன்றியே அதன்வழி அருளற்பாலதாய அருளைச் சிவபெருமானே அருளுவான். இங்ஙனம் எந்த உருவத்தையும் தனது உருவமாகவே கொண்டு அருள்புரிகின்ற சிவபெருமான் பிறர் தனது உருவ மாய் நின்றாராக எவரும் கண்டிலாத, காண வாராத நிலையை உடையவன். அத்தகைய அவனே எம் கடவுள். இவற்றால் எல்லாம், மூவரும், பிறரும் ஆகிய தேவர் பலரும் ‘பசு’ எனப்படும் உயிர்வருக்கத்தினரேயாகச் சிவபெருமான் ஒருவனே அனைவர்க்கும் தலைவனாகிய பதி - என்பது பல்லாற்றானும் விளக்கப்பட்டது. “ஏனோர்க்கும்” என்னும் உம்மை, ‘சிவநெறியாளர்க் கேயன்றிப் பிற சமயத்தார்க்கும்’ என இறந்தது தழுவிற்று. கண்ணி - 9,10: அவன் என்றும் நீங்காத சிறப்பினை யுடைய சிவலோகத்தில், தன்னுடைய வளாகமாகிய சிவபுரத்தில் அழகு நிறைந்த திருக்கோயிலுள் ஓலக்கமாக வீற்றிருக்கும் பொழுதில்
|