இறைவன் கோலம் கொள்ளல் 11. | பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை, நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள் |
12. | ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப - ஊனமில்சீர் |
13. | நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர் செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தா |
14. | வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள் |
செந்தாமரை போலும் கண்களை யுடைய தேவர்கள் செவ்வி யறிந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்து குழுமி, ‘பெருமானே, திருவோலக்க மேயல்லாமல் தேவரீரது திருவுலாக் காட்சியையும் எங்கட்கு வழங்கியருளல் வேண்டும்’ என்று பலநாட்கள் குறையிரந்த நிலைமையில் ஒருநாள். பொதுவாக, ‘ஆடவர்க்குக் கண்கள் செந்தாமரை போன்றிருத்தல் விரும்பத் தக்கது’ என்னும் கருத்தால் “செங்கண்” என்றார். கண்ணி - 11, 12: பூ மங்கை - இலக்குமி. புகழ், வெற்றி யால் வரும் புகழ். எனவே, புகழ் மங்கை கொற்றவையாம். நாமங்கை - கலைமகள். ‘இம்மூவரும் நன்கு செய்தமைத்த பாதுகாப்பில் இருக்கின்ற மலைமகள்’ என்க. ஞானக் கொழுந்து- மலைமகள். அவள் ஞானத்தின் முடிநிலையாதல் பற்றி அங்ஙனம் கூறப்பட்டாள். நகராசன் - மலை யரையன். நகம் - மலை. சிவபெருமான் புறப்படும் பொழுது மலைமகளே அவனைத் தீண்டி அலங்கரிக்கத் தக்கவள் ஆதலின் அவள் அவனுக்குத் தலைக்கோலம் செய்தாள். தேன் மொய்த்த குஞ்சி - ‘தேன்’ என்னும் வண்டுகள் மொய்த்த தலைமுடி. நறுமணம் பொருந்திய மலர்கள் நிறைந்திருத்தலால் வண்டுகள் மொய்ப்பவாயின. ஊனம் - குறை. சீர் - அழகு. கண்ணி - 13, 14: நந்நா - கெடாத. வனம் - பூஞ்சோலை ‘அதன்கண் மலரும் செந்தாமரை, தடம் சேர் செந்தாமரை’ - என்க. மந்தாகினித் தடம் - ஆகாய கங்கையாகிய தீர்த்தம். நூறாயிரம் - இலட்சம். நொந்தா - கெடாத. வயந்தன் - வசந்தன் இவன் மன்மதனுக்குத் தோழன், இவன் ஆகாயகங்கையிற் பூத்த செந்தாமரை மலர் நூறாயிரத்தால் தொடுத்து வனைந்த திருவாசிகையைச் சிவ பெருமானது திருமுடிக்கு மேல் விளங்கும்படி சூட்டினான்.
|