15. | குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு தலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த |
16. | கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப் பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும் |
17. | சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர் வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா |
18. | மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்(கு) அணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய |
19. | ஆரம்அவைபூண்(டு) அணிதிக ழும்சன்ன வீரந் திருமார்பில் வில்இலக - ஏருடைய |
கண்ணி - 14, 15: பச்சைக் கருப்பூரம், குங்குமப் பூ, பனி நீர் முதலிய கலவை உறுப்புக்களைச் சேர்த்து உயர்குலப் பெண்டிர் உருவாக்கிய செழுமையான சந்தனக் குழம்பால் பெருமானது மார்பிடம் முழுதும் பூசி கண்ணி - 15, 16: கற்பக தருவால் தரப்பட்ட, செயற் பாடு நிறைந்த நறுமணம் கமழும் பட்டு உடையை உடுத்து, பொன்னால் ஆகிய வீரக்கழல்களைப் பாதங்களில் விளங்கக் கட்டி. செயற்பாடு கை வன்மை ஆதலின் “கலை” என்றார். உடைகளும் மணம் ஊட்டி வைக்கப்படுதல் அறிக. கண்ணி - 16, 17: ஒளியை வீசுகின்ற சூளாமணி பதிக்கப் பெற்ற மணிமுடியைச் சென்னியிலே கவித்து, உச்சியினின்றும் போந்து நெற்றியில் தொங்குகின்ற சுட்டியைச் சேர்ந்த, ஒளி நிறைந்த நெற்றிப் பட்டத்தை நிலையாக அணிவித்து, கண்ணி - 17, 18: துளையிடப்படாத மணிகள் அழுத்திய, சுறாமீன் வடிவமாகச் செய்யப்பட்ட வளையங் களைக் காதுகளில் அணிவித்து. கண்ணி - 18, 19: அப்பொழுதே, அழகு பொருந்திய வயிரத்தால் ஆகிய கண்டிகை, பொன் இழை கோத்த பெரிய முத்தாரம், இவைகளுடன் அழகிய சன்னவீரம் அழகிய மார்பில் ஒளிவிட, (‘பூட்டி’ என ஒரு சொல் வருவிக்க), கண்ணி - 19, 20: அழகுடைய எட்டுத் தோள்களிலும் தோள்வளைகளைப் பொருத்தி, (தோள்வளை - வாகு வலயம்). பார்த்தவர் மனம் மகிழும்படி கச்சினை இறுகக்கட்டி.
|