பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை194

20.எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும்
கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் - கொண்டு
21.கடிசூத் திரம்புனைந்து, கங்கணம்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்கு - அடிநிலைமேல்

இறைவன் புறப்பாடு

22.நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர்
23.எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாம்உணர்த்த - ஒண்ணிறத்த

கண்ணி - 20-22: கடி சூத்திரம் - அரை நாண் இஃது அழகிற்காக உடைமேல் கட்டப்படுவது. ‘கடிசூத்திரம் கொண்டு புனைந்து’ என மாற்றி யுரைக்க. கங்கணம் - காப்பு. திருமேனி முழுதும் பொருந்திய புனையப்படுவன யாவற்றையும் புனைந்து. ஆங்கு - அதன்பின். அடிநிலை - பாதுகை. ‘அடிநிலைமேல் நிற்பித்து’ என ஒரு சொல் வருவித்து, அதனை, ‘நந்தி மாகாளர் கடைகழிந்த போழ்தது’ என்பத னோடு முடிக்க. மேற்கூறிய கோலங்களை எல்லாம் புனைவித் தவர் நந்தி மாகாளர் என்க. கடை - முதல்வாயில். “போழ்தத்து” என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை.

கண்ணி - 22: வசுக்கள் - ‘முப்பத்து மூவர்’ எனத் தொகைபெற்ற தேவர்களுள். எண்ம ராய ஒரு குழுவினர். இருக்கு - மந்திரங்கள்.

கண்ணி - 22, 23: எண்ணருங் கீர்த்தி - அளவிட இயலாத புகழ், எழுவர் இருடிகள் - சத்த இருடிகள் அகத்தியர், புலத்தியர், அங்கிரா, கௌதமர், வசிட்டர், காசிபர், மார்க்கண்டேயர்.

அண்ணல் - தலைவன்; சிவபெருமான் ஆசிகள் வாழ்த்துக்கள். அவை, “நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க”1 என்றாற்போலக்கூறப்படுவன, ‘வெல்க’ என்றும், ‘சயசய’ என்றும் சொல்லப்படுவனவும் வாழ்த்துக்களே. ‘இவ்வாறு இறைவனை உயிர் வருக்கத்தினர் வாழ்த்துதல். உலகம் வாழ்தற் பொருட்டு’ என்பதை, வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்”2 என்பதனான் அறிக.