பக்கம் எண் :

195திருக்கைலாய ஞானஉலா

24.பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் - பொன்னியலும்
25.அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண்
26.நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏத்த
வருணன் மணிக்கலசந் தாங்கத் - தெருவெலாம்
27.வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர்

கண்ணி - 23, 24: ஒள் நிறத்த - ஒளி பொருந்திய நிறத்தையுடைய. ஆதித்தர் - சூரியர். முப்பத்து மூவர் தேவரில் சூரியர் பன்னிருவராவர். “பல்லாண்டு” என்பதும் ‘பல் யாண்டு’ எண்ணில்லாத யாண்டுகள் - வாழ்க’ என்னும் குறிப்பினதே யாகும்.

மகதி - ‘மகதி’ என்னும் யாழை ஏந்திய முனிவன்; நாரதன்.

கண்ணி - 24, 25: பொன் இயலும் பொன்போல ஒளிவிடுகின்ற. அங்கி - தீங்கடவுள். கமழ் தூபம் - நறுமணப் புகை, சத்த இருடிகள் கூறிய ஆசிகள் முன்பே வேதம் முதலியவற்றில் அமைந்து, மரபாகச் சொல்லப்பட்டு வருவன. ‘அவை தம் பயனைத் தப்பாமல் தரும்’ என்பது கொள்கை. இங்கு யமன் வந்து மங்கல மொழிகளால் வாழ்த்தியது தனது பணிவைப் புலப்படுத்திக்கொள்ளும் உபசார வார்த்தை. ‘இவை தம்முள் வேறுபாடு’ என்க.

கண்ணி - 25, 26: நிருதி - தென்மேற்குத் திசைக்குக் காவலன். ‘இவன் அரக்கன்’ என்பது பற்றிச் சிவந்த கண்களை யுடையவனாகக் கூறினார். முதலோர் - நிருதியின் பரிவாரங்கள், நிழல் - ஒளி. கலன்கள்- அணிகலன்கள். இவை உலா இடையில் எந்த அணிகலமாயினும் பழுது படின் உடனே மாற்றிப் பூட்டுதற்கு அமைவன.

வருணன் - மேற்றிசைக் காவலன் கலசம் - நீர்ப் பாத்திரம்.

கண்ணி - 26, 27: வாயு - வாயு தேவன். ‘தெருவெலாம் விளக்க’ என்க. விளக்குதல், குப்பைகளைப் போக்கி அழகு விளங்கச் செய்தல். மழை - மேகம். மேகத்திற்குத் தலைவன் இந்திரன் ஆதலின் அவனே மேகங்களைக் கொண்டு தெருக் களில் நீர் தெளிப்பித்தான் என்க.

சேரமன் - சந்திரன். குபேரனோடு கூட இவனும் வடதிசையைக் காக்கின்றான். சீர் - புகழ்.