பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை196

28.ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய
29.உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்த
30.கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புடைஇரட்டத் - தங்கிய
31.பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக

கண்ணி - 28: ஈசானன், வடகீழ்த்திசைக் காவலன். இவன் உருத்திரர் வகையைச் சேர்ந்தவன். அடை - வெற்றிலை. அதனையுடைய பை அடைப்பை. எட்டுத் திக்குப் பாலகர்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு பணியை மேற் கொண்டமை யறிக. வடதிசையில் குபேரனுக்கு ஈடாகச் சந்திரன் சொல்லப்பட்டான். குபேரன் பின்பு சொல்லப் படுவான்.

அச்சுனிகள் - அச்சுவினி தேவர்கள். இவர்கள் தேவ மருத்துவர்கள். முப்பத்து மூவரில் இவர்கள் இருவராவர். வாய் ஆர்ந்த - வாய் நிறைந்த. இவர்கள் வாழ்த்துரைத்தல், ‘தம்மால் சிவபெருமான் அடையத் தக்க உடல் நலம் ஒன்றில்லை; அவன் நிராமயன்; (இயல்பாகவே நோயிலி) என்பது பற்றியாம்,

கண்ணி - 29: இங்கு “உருத்திரர்கள்” என்றது ஏகாதச ருத்திரரை. முப்பத்து மூவரில் இவர் பதினொருவராவர். இங்ஙனம் தேவர் முப்பத்து மூவரும் திரண்டமையறிக. ‘இவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோடி பரிவாரம்’ என்பதால் தேவர் முப்பத்து முக்கோடியினர் ஆவர்,

குபேரன் இத்திருவுலாவில் தக்கார்க்கும், வேண்டு வார்க்கும் பொன் மழையும், மணி மழையும் பொழிந்து வந்தான் என்க.

கண்ணி - 29, 30: கருத்து - உள்ளன்பு. தீர்த்தங்கள் - தீர்த்தங்களின் அதிதேவதைகள். கவரி - சாமரை. புடை - இருபக்கத்திலும். இரட்டுதல் -மாறி மாறி வீசுதல்.

கண்ணி - 30, 31: தங்கிய - எட்டுத் திசைகளிலும் தங்கியிருக்கின்ற பைந் நாகம் - படத்தையுடைய பாம்பு. சுடர் - விளக்கு. அவை தம் தம்மிடத்திலுள்ள மாணிக்கங்களையே விளக்காக எடுத்தன. கைந் நாகம் - கையை யுடைய யானை அவை கால்களை மண்டியிட்டு, கைகளைத் தலைமேல் வைத்து வணங்கின.