பக்கம் எண் :

197திருக்கைலாய ஞானஉலா

32.மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மோகத்(து) உருமு முரசறையப் - போகம்சேர்
33.தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான்
34.விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு - எண்ணார்
35.கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் - செருக்குடைய
36.சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத

கண்ணி - 31, 32: மெய் - இறைவனுக்குத் திருமேனியாய் உள்ள. நாகம் - ஆகாயம். விதானம் - மேற்கட்டி. கொடி - துகிற் கொடிய மின்னல் - தோன்றித் தோன்றி மறை தலால் அது காற்றால் மாறி மாறி வீசுகின்ற கொடியாயிற்று. மோகம் - மயக்கம். முரசின் ஓசையால் சிலர்க்கும், சில உயிர் கட்கும் மயக்கம். உண்டாயிற்று என்க. அன்றி, ‘உலாவைக் காண விருப்பத்தை உண்டாக்கிற்று” என்றலும் ஆம். இங்கும், ‘மேகம்’ எனல்பாடம் அன்று. உருமு - இடி. விதானம், கொடி, முரசு இவைகள் உண்மையாகவே பல இருப்பினும், இவை ஒப்புமையால் அவையாய் அழகுசெய்தன.

கண்ணி - 32, 33: தும்புரு நாரதர்கள், உம்மைத் தொகை. ‘போகம் சேர் நுண்ணிடையார்’ என இயைக்க. இதுகாறும் வந்த ‘செய’ என் எச்சங்கள் நிகழ் காலத்தன.

கண்ணி - 34: பணிய - பணியும்படி. இவ்வெச்சம் எதிர் காலத்தது. இது “மேல்கொண்டு” என்பதனோடு முடியும். ‘வெண்நார்’ எனப்பிரித்து, ‘நார் - தனது அன்பிற்கு இடமாகிய விடை’ என உரைக்க. ‘மேல் கொள்ளல்’ என்பது, ‘ஊர்தல்’ என்னும் பொருட்டாகலின் அது “விடையை” என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. மழ விடை - இளமையான இடபம்.

கண்ணி - 34, 35: எண் ஆர் - எண் நிறைந்த; எண்ணால் மிகுதிப்பட்ட. கருத்துடைய - அன்புடைய. பாரிடங்கள் - கூளிச் சுற்றம்; பூத கணங்கள். ‘ஒத்துக் காப்புச் செய்ய’ என்க. ஒத்து - இணங்கி. காப்பு - காவல். கடைகள் - வாயில்கள்.

கண்ணி - 35. 36: செருக்கு - பெருமிதம்; வீரம். சேனாபதி - தேவ சேனாபதி; முருகன். யானை, ஐராவதம். ஆனா - நீங்காத.