| 37. | அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக் கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் - மன்னிய |
| 38. | மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் - ஏல்வுடைய |
| 39. | சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான் கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான் |
| 40. | காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி வாமன் புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர் |
போர், அசுரர்மேற் செய்யும் போர், முன் செல்வது தூசிப்படை பின்செல்வது கூழைப்படை. கண்ணி - 37 - 40: கைபோத - பக்கத் துணையாய் வர. கல் - வலிய கல். நவிலும், உவம உருபு. மேல் இட - மேற் பட்டுத் தோன்ற. கரும்பு வில் இடப்பால் ஏல்வுடைய - கரும்புவில்லை இடப்பக்கத்தில் ஏற்றலை உடைய காமன். ஏல்வு, தொழிற் பெயர். “பால் மென் கரும்பு” என்பதில், ‘சாறு’ என்னும் பொருட்டாய்க் கரும்பிற்கு அடையாயிற்று. எய்வான் - எய்தற் பொருட்டு. கொங்கு - தேன். நறுமண முமாம், வில் மேலே கூறப்பட்டமையால், ‘வாளியை அதன் கண் கோத்து அமைத்த’ என்க. வாளி - அம்பு. கணை ஐந்து மேலே கூறப்பட்டதாயினும் ‘காமனுக்கு உள்ள சிறப்பு ஐங்கணைகளை எய்வதே’ என்பது தோன்றுதற்கு. “ஐங்கணையான் காமன்” எனப் பெயர்த்துங் கூறினார். காமனது கொடி மீனக் கொடி. அவனுடைய படைகள் மகளிர் குழாம். அவர்கள் ஆடவர்மேல் போர்க்குச் செல்லக் காமன் அப்படைக்குத் தலைவனாய் வில்லும், அம்பும் கொண்டு செல்வான் - ஆயினும் இப்பொழுது அந்தப் படை சிவபெருமான் மேல் வரக் காமன் அச்சத்தால் சிவபெரு மானுக்கே துணைசெய்பவனாய்த் தன் குறிப்பறியாது எதிர்த்து வரும் தன் படைகள் மேலேயே தன் அம்புகளை எய்ய வருகின்றான். ‘காமன் தன் கொடிப் படைக்கு எதிராய்ப் போத’ என்க. காரி - ஐயனார். கதம் - கோபம். வாமம் - அழகு. ‘காரியாகிய வாமன்’ என்க. கண்ணி - 40 - 42: நாமம் - அச்சம். ‘விநாயகனை உள்ளுறுத்துக் கதக் காரி செல்ல’ என மேலே கூட்டுக.
|