புரிசை - மதில். “மாடக் கூடல்” என்பதற்குப் பொதுப் பொருள் கொள்ளாது, திருவிளையாடற் புராணத்தின் வழி, ‘நான்மாடக் கூடல்’ எனப் பொருள் கொள்ளுதல் சிறப்பு. ‘கூடற் பதிமிசை நிலவு ஆலவாய்’ என இயைக்க. மிசை, ஏழனுருபு. கூடல், தலப் பெயர். ஆலவாய், அத்தலத்தில் உள்ள கோயிலின் பெயர். ‘அருட்டுறை, பூங்கோயில்’ என்பன போலச் சில தலங்களில் கோயிலுக்குத் தனிப்பெயர் இருத்தல் அறியத் தக்கது. ‘பால் நிறச் சிறகு, வரிச் சிறகு, எனத் தனித்தனி முடிக்க. பால் நிறம் - பாலினது நிறம் போலும். பால். அதன் நிறத்தை உணர்த்தலின் ஆகுபெயர். வரி - அழகு. ‘கீற்று’ எனினும் ஆம். மன்னிய - நிலைபெற்றுள்ள. மாற்றம் - சொல். இதுவும் ஆகுபெயராய் திருமுகத்தில் எழுதப்பட்ட வரிவடிவங்களைக் குறித்தது. பருவம் - உரிய காலம்; கார் காலம். கொண்மூ - மேகம். படி - ஒப்பு. ஒருமை யின் உரிமையின் - ‘உதவுதல் தனக்குக் கடன் என ஒருப்பட்ட மனத்தினாலே கொண்ட உரிமையினால். குரு - நிறம்; அழகு. மா மதி - பெரிய சந்திரன்; பூரணச் சந்திரன். ‘புரை குடை; குலவிய குடை’ எனத் தனித் தனி இயைக்க. புரை - ஒத்த. குலவிய - விளங்குகின்ற. ‘குடைக் கீழ்ச் சேரலன்’ எனவும், ‘உகைக்கும் சேரலன்’ எனவும் தனித்தனிச் சென்று இயையும். செரு மா - போர்க்கு ஏற்ற நடைகளைக் கற்ற குதிரை. உகைத்தல் - ஏறிச் செலுத்துதல். பண்பால் - யாழ் இசைக்கும் தன்மை நிறைந்த நிலைமையினால். தன் போல் - தன்னை (அந்தச் சேரலனை)ப் போலவே. போந்தனன் - தன்பால் புகுந்தனன். மாண் பொருள் - மிகுந்த பொருள். வர விடுப்பது - மீண்டு வர விடை கொடுத்து அனுப்புதல். சிறப்புரை: ‘கூடற் பதிமிசை நிலவு ஆலவாயில் மன்னிய சிவன் யான் மொழிதரும் மாற்றம் சேரலன் காண்க, அம்மாற்ற மாவன, - பாணபத்திரன் தன்னைப் போலவே என்பால் அன்பன் என்பதும் அவன் தன்னைக் காணுதலைக் கருதித் தன்பாற் புகுந்தனன் என்பதும், அவனுக்கு மிகுந்த பொருளைக் கொடுத்து மீண்டு வரும்படி விடை கொடுத்து அனுப்புதல் என்பதுமாகும் என வினை முடிக்க. முதல் அடி தலச் சிறப்புக் கூறியது. அடுத்த இரண்டடிகள் அத்தலத்தில் உள்ள கோயிற் சிறப்புக் கூறியன. ஐந்து, ஆறாம் அடிகள் சேரலனது கொடைச் சிறப்புக் கூறியன. ஏழு, எட்டாம் அடிகள் அவனது வெற்றிச் சிறப்புக் கூறியன. ஒன்பது, பத்தாம் அடிகள் பாணபத்திரனது அன்புடைமை கூறியன. இறுதி இரண்டடிகள் ஆணை கூறியன. ‘இப் பாசுரத்தில் குறிக்கப்பட்ட சேரலன் யாவன்’ என்னும் ஆராய்ச்சியில் கருத்து வேறுபாடுகள் உள. பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புராணத்துள் இப் பாசுரத்திற்கு குறிக்கப்பட்ட பாண
|