பத்திரை வரகுண பாண்டியன் காலத்தவராகக் கூறினார். ‘சுந்தரர் காலத்துப் பாண்டியன் வரகுணன்’ என்பதற்கு நூற்சான்றோ, வரலாற்றுச் சான்றோ எதுவும் இல்லை. பரஞ்சோதி முனிவர்க்கு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகிய சேக்கிழார், ‘இப்பாசுரத்தில் குறிக்கப் பட்ட சேரலன் சேரமான் பெருமாள் நாயனாரே’ எனத் திட்டமாக வரையறுத்து, இத்திருமுகப் பாசுரத்தைக் கண்டு, சேரர் பெருமான் பாண பத்திரரைப் பெரும் பக்தியோடும், சிறப்போடும் வரவேற்று வழிபட்டுப் பெரும்பொருள் கொடுத்துப் பாசுரத்தில் - வரவிடுப்பதுவே - என்று இருத்தலால் பத்திரரைத் தம்மிடத்தே இருத்திக் கொள்ள மாட்டாது விடை கொடுத்து விடுத்தார்’ என இப்பாசுர வரலாற்றினைக் கழறிற்றறிவார் புராணத்துள் பன்னிரண்டு பாடல்களால் விரித்துரைத்தார். ‘சேரமான் பெருமாள் நாயனார்’ சுந்தரர்க்குத் தோழர் என்பது நன்கறியப்பட்டது. மறைமலை அடிகளார் தமது, ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்னும் நூலில், மாணிக்க வாசகர் மூவர்க்கு முற்பட்டவர்’ என்னும் தமது வாதத்தை நிலை நிறுத்தற் பொருட்டுப் ‘பெரிய புராணத்துள் திருமுகங் கொடுத்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் இடைச் செருகல்; சேக்கிழார் பாடியன அல்ல’ என்றார். திருமுகங் கொடுத்த வரலாற்றைக் ‘கல்லாடம்’ என்னும் இலக்கியம் குறிப்பிடுகின்றது. அது மாணிக்கவாசகர் காலத்து நரிபரியாக்கிய திருவிளையாடலைக் கூறிற்று, மற்றும் பல கதைகளைக் குறிப்பிடுகின்றது. ஆயினும் ஞானசம்ந்தர் முதலிய மூவரில் ஒருவரைப் பற்றிய குறிப்பும் அவ் இலக்கியத்தில் இல்லை. ‘ஆகவே, அவ் இலக்கியம் மூவர் காலத்திற்கு முற் பட்டது’ என்றும், அது மாணிக்க வாசகரைக் குறிப்பிட்டு விட்டு மூவரைக் குறியாமையால் மாணிக்கவாசகரது காலம் மூவர் காலத்திற்கு முற்பட்டது என அடிகளார் முதலில் கூறினார். பெரிய புராணத்துள் திருமுகங் கொடுத்த வரலாறு சேரமான் பெருமாள் நாயனார் காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுதல் அடிகளார் முதலில் கூறிய கூற்றை மாற்று வதாகின்றது. அது பற்றி அவ்வரலாறு கூறும் பெரிய புராணப் பாடல்களை ‘இடைச் செருகல்’ என்றார். ஆயினும் அதனை நாம் அவ்வாறு கொள்ளுதற்கில்லை. இத்திருமுகப் பாசுரத்தில் சேரலனைப் “பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு - ஒருமையின் உரிமையின் உதவுபவன்” என அவனது கொடையை ஆலவாய்ப் பெருமான் சிறப்பித்தருளினமை காணப்படுகின்றது. பெருமான் அருளிய வாறே பாண பத்திரர்க்குச் சேரர்பிரான் மிகப் பெரும்பொருள் வழங்கியதைச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பெருமான் திருமுகம் விடுக்கும் அளவிற்குத்
|