பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை4

திருவருள் பெற்று விளங்கிய சேரன் எவனும் சேரமான் பெருமாள் நாயனாருக்குமுன் இருந்ததாகத் தெரியவில்லை.

சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையில் சேரமான் பெருமாளைக் குறிப்பிடுகையில்,

‘கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்’

எனக் குறிப்பிட்டார். “கார்கொண்ட கொடை” என்பது திருமுகப்பாசுரத்தில், பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு - ஒருமையின் உரிமையின் உதவி” எனக் கூறப்பட்ட தனை அப்படியே எடுத்து மொழிந்ததாய் உள்ளது. அதை வைத்துத்தான் சேக்கிழார் சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றில் திருமுகம் கொடுத்த வரலாற்றை விரித்துக் கூறினார். அதை, ‘இடைச் செருகல்’ என்று தள்ளிவிடப் பார்ப்பது முறையாகத் தோன்றவில்லை. சேரமான் பெருமாள் நாயனார் தில்லைத் தரிசனம் செய்த சிறப்பைக் கூறுமிடத்தில் சேக்கிழார்,

‘சீரார் வண்ணப் பொன்வண்ணத்

திருவந் தாதி திருப்படிக்கீழ்ப்

பாரா தரிக்க எடுத்தேத்திப்

பணிந்தார், பருவ மழைபொழியும்

காரால் நிகர்க்க அரியகொடைக்

கையார் கழறிற் றறிவார்தாம்’

எனக் .கூறினார். இதில் நாயனாரது கொடைச் சிறப்பைக் கூறிய தொடர் ‘திருமுகப் பாசுரத்தில் உள்ள தொடரே’ என்பது தெற்றென விளங்குகின்றதன்றோ! பின்னும், ‘சேரர்பிரான் திருவாரூர் சென்று சுந்தரரைக் கண்டு வணங்கிய பொழுது அவர் பெரிதும் மகிழ்ந்து சேரமானது கையைப் பற்றினார்’ எனக் கூறும்பொழுது, “பருவ மழைச் செங்கை பற்றிக் கொண்டு” எனக் கூறினார். இதுவும் முன்னர்க் கூறியதையே பின்னரும் வலியுறுத்தி மொழிந்ததாகின்றது.

பின்பு சுந்தரர் சேரர்பிரானை அழைத்துக் கொண்டு பாண்டி நாட்டு யாத்திரை செய்ய விரும்பிச் சேரரை அழைத்ததைக் குறிப்பிடும்பொழுது,

‘சேரர் பிரானும் ஆரூரர்

தம்மைப் பிரியாச் சிறப்பாலும்

ஆர்வம் பெருகத் தமக்கு அன்று

மதுரை ஆலவாய் அமர்ந்த

வீரர் அளித்த திருமுகத்தால்

விரும்பும் அன்பின் வணங்குதற்குச்

சேர எழுந்த குறிப்பாலும்

தாமும் உடனே செலத்துணிந்தார்’