பக்கம் எண் :

5திருமுகப் பாசுரம்

எனக் கூறினார். இதிலும் திருமுகங் கொடுத்த வரலாற்றைச் சேக்கிழார் தெளிவாகக்குறிப்பிட்டமை காணப்படுகின்றது. பின்பு மதுரையில் சென்று தரிசித்ததைக் குறிப்பிடும் பொழுதும்,

படியேறு புகழ்ச்சேரர் பெருமானும் பார்மிசை வீழ்ந்து
அடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணை
முடிவேதென் றறிந்திலேன் என மொழிகள் தடுமாற

என்றார். எனவே ‘திருமுகங் கொடுத்த வரலாற்றைச் சேக்கிழார் ஏதோ ஓரிடத்தில் போகிற போக்கில் ஒருவாறு கூறிப் போயினார்’ என்னாது, ‘சேரமான் பெருமாள் நாயனாரது வரலாற்றில் அஃதொரு முதன்மையான பகுதியாகக் கருதி வலியுறுத்தினார் என்றே கூற வேண்டியுள்ளது. அதனால் தான் சுந்தரர் சேரமான் பெருமாளைக் குறிப்பிடுமிடத்து அந்தக் கொடைச் சிறப்பையே எடுத்தோதிக் குறித்தார். ஆகவே, பெரிய புராணத்துள் ஒரு சில பாடல்களை, ‘இடைச் செருகல்’ என்று சொல்லி நீக்கிவிட முயன்றால், அம்முயற்சி பின் பல இடங்களில் தடைப்பட்டு வெற்றி பெறாது மறையும். எனவே திருமுகங் கொடுத்த வரலாறு பெரிய புராணத்துட் கூறப்பட்ட வாறே கொள்ளத்தக்கது. பரஞ்சோதி முனிவர் கூற்றில் உள்ள காலக் கணக்கை நாம் அப்படியே கொள்ளுதற்கில்லை.

இனி, “ஆல நீழல் உகந்த திருக்கையே” எனத் தொடங்கும் திருஞானசம்பந்தரது திருவாலவாய்த் திருப் பதிகத்தில்.

‘தாரம் உய்த்தது பாணற் கருளொடே’

என்று ஒரு தொடர் வந்துள்ளது. “தாரம் பல் பண்டம்” என்பது நிகண்டு ஆதலின், அத்தொடர் சேரமானால் பாணற்குப் பல பண்டம் வரச் செய்த திருவிளையாடலைக் குறித்ததாகலாம் - எனச் சிலர் கருதுவர். ‘தாரம்’ என்பது ஏழிசைகளுள் சிறந்த தொன்று. அதனை இனிது இசைக்கப் பாணற்கு ஆலவாய்ப் பெருமான் அருளியதையே அத்தொடர் குறிப்பதாகக் கொண்டு சேக்கிழார், திருநீலகண்டப் பாண நாயனார் வரலாற்றில் அவருக்கு ஆலவாய்ப் பெருமான் பலகையிட் டருளிய செயலைக் கூறினார். அதனையும் பரஞ்சோதி முனிவர் பத்திரர் பொருட்டுச் செய்த திருவிளையாடலாகவே கூறினார். பரஞ்சோதி முனிவர் பல கலை வல்லவராயினும் தமது புராணத்தை ‘ஆலாசிய மான்மியம்’ என்னும் வடநூலைத் தழுவியே செய்ததாக அவர் கூறியிருத்தலையும் நாம் இங்கு நினைத்தல் வேண்டும்.

ஆலவாய்ப் பெருமானடிகள் அருளிச் செய்ய, நம்பியாண்டார் நம்பிகள் பதினொன்றாந் திருமுறையின் முதல் திருப்பாடலாக அதனைக் கோத்து வைத்ததில் அத்திருப் பாடல் இத்துணை ஆராய்ச்சிக்கு இடமாயிற்று.

திருமுகப் பாசுரம் முற்றிற்று