பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை20

26.பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்
டிரான்என நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்துறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே. 

3


உடைமைகளாகவும் உடையவன். எனவே, ‘முழுமுதல் தலைவன்’ என்பதாயிற்று “அவன்” என்பது, முன்னைப் பாட்டிற் போந்த அந்த ஈசனைச் சுட்டிற்று. நினைதல், இங்குத் துணிதலைக் குறித்தது. கூசுதல் - தம்மையும் ஏனையோரையும் தலைவர்களாக எண்ண நாணுதல். ‘அவனையே மனத்தகத்துக் கொண்டிருந்து’ என்க. ‘கொண்டிருந்தும், பேசியும்’ என எண்ணும்மை விரிக்க. “பிரான்” என்றதும், ‘அவன்’ என்னும் சுட்டளவாய் நின்றது. பிறவாமை, எதிர்மறை வினையெச்சம்.

‘சிவனைப் பொது நீக்கியுணர்ந்து, மறவாது நினைவாரை அவன் பிறவாமற் காப்பான்’ என்றவாறு.

26. அ. சொ. பொ.: ‘அந்தணன், தன்னைப் பன்னாள் பரவித் தொழுவாரது இடரைக் கண்டு (வாளா) இரான் என நிற்கின்ற ஈசன்’ என இயைக்க. “பிரான்” என்றது சொல்லு வாரது குறிப்பால், ‘முழுமுதல் தலைவன்’ என்னும் பொருட்டாய் நின்றது. ‘தன்னையே பிரான் என்று’ எனப் பிரிநிலை ஏகாரம் விரித்து, முன்னே கூட்டுக. பரவுதல் - துதித்தல். “ஈசன்” என்பது இங்கு, ‘இறைவன்’ என முன்னர்ப் பொதுமையில் நின்று, பின்னர் “இரான் என நிற்கின்ற” என்னும் அடை பெற்று, சிவனது சிறப்புணர்த்தி நின்றது. “தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே” என நம்பியாரூரரும் அருளிச் செய்தார். கிண்டுதல் - கிளறுதல் பொருதல் - போர் செய்தல். பொதும்பர் - சோலை. பூக்களால் நிரம்பியிருத்தல் பற்றித் திருமுடியை, ‘சோலை’ என்றார். பொம் மெனல், ஒலிக் குறிப்பு. “துறை” எனவே, ‘கங்கை’ என்பது தானே பெறப்பட்டது. ‘சடையாகிய செம்பொன் முடி’ என்க. ‘சடை, நிறத்தால் பொன்போல்கின்றது’ என்பதாம். ‘பிற முடிதனை விரும்பாதவன்’ என்பது குறிப்பு. அந்தணன் - அழகிய தட்பத்தினை (கருணையை) உடையவன்; காரணப் பெயர். கண்டீர், முன்னிலையசை.

‘தன்னைப் பொது நீக்கி நினைந்து, பன்னாள் பரவித் தொழுவாரது இடரை நீக்குபவன் சிவன்’ என்பதாம்.