| 63. | சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா விலங்கு கொடும்புருவம் வில்லா - நலந்திகழும் |
| 64. | கூழைபின் தாழ, வளைஆர்ப்பக், கைபோந்து கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் - சூழொளிய |
| 65. | கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர அங்கம் பொருதசைந்த ஆயிழையார் - செங்கேழ்நற் |
கண்ணி - 63 - 65: மகளிர் ஆடவரோடு ஆடும் கலவியாகிய போருக்கு அவர்தம் காலில் அணிந்துள்ள சிலம்புகளே போர்ப் பறை. அவை அப்போர்க்காலத்து ஒலித்தல் இயல்பு. விலங்கு கொடும் புருவம் - விலங்குபோல வளைவான புருவங்கள். அவைகளே வில், அவை அப்போர்க் காலத்தில் வளைதல் (நெறிதல்) இயல்பு. கூழை, வளை இவை சிலேடை. கூழை - கூந்தல்; கூழைப் (பின்னணிப்) படை. தாழ அவிழ்ந்து அலைய கலவிக் காலத்துக் கூந்தல் அலைதல் இயல்பு. இது பின்னணிப் படை. முன்னணிப் படைக்கேற்பச் செயற்படுதலை ஒக்கின்றது. வளை - கை வளையல்; சங்கு. இவை இரண்டும் ஒலித் தலைச் செய்யும் கை - பக்கம் போதரலாவது போர் செய்வார் வலஞ் செல்லுதலும் இடம் செல்லுதலும் இடம் செல்லுதலும் இந்நிலை கலவி யிடத்தும் பொருந்தும். கேழ் கிளரும் - நிறம் மிக்க ‘நிறம்’ என்றது ‘திதலை’ எனப்படும் நிறத்தினை. அல்குல் - பிருட்டம். ‘துடி இடை’ எனக் கூறுதற்கு ஏற்ப, நடுவில் இடை சுருங்கியிருக்க, மேலே ஆகமும், கீழே பிருட்டமும் அகன்றிருக்கும் நிலையில் பிருட்டம் தேர்த்தட்டோடு உவமிக்கப்படுதல் வழக்கமாயிற்று. உந்தி - செலுத்தி. மா - யானை. யானைத் தந்தத்தோடு உவமிக்கப்படுதல் பற்றி யானையாயின. பொங்க - சினம் மிக; புளகிக்க. “கொழுநர்” என்றது, அப்பொழுது உரிமை பெற்றோரை. அல்லாக்கால் கவியாலே அவர் மனத்தைக் கவர்தல் வேண்டா என்க. பொருது - போர் செய்து. ‘பொருது அங்கம் அசைந்த’ என்க. அங்கம் - உறுப்புக்கள். அசைந்த - சோர்ந்த.
|