| 66. | பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி நற்பெருங் கோலம் மிகைப்புனைந்து - பொற்புடைய |
| 67. | பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர் |
| 68. | சூளிகையும் சூட்டும் சுளிகையும் சுட்டிகையும் வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின் |
| 69. | மேல்ஏறி நின்று தொழுவார்; துயர்கொண்டு மால்ஏறி நின்று மயங்குவார் - நூலேறு |
| 70. | தாமமே தந்து சடாதாரி நல்கானேல், யாமமேல் எம்மை அடும்என்பார் - காமவேள் |
| 71. | ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார்; கையெறிவார் தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார்; - பூமன்னும் |
கண்ணி - 66: இரவு கலவிப்போரால் சோர்வுற்ற மகளிர் காலையில் குளித்து ஒப்பனை செய்கின்றனர். ‘மணி நீரைப் பொற்கலசத்துள்ளால் எடுத்து முகம் சேர்த்தி’ என மாற்றியும், ஒருசொல் வருவித்து உரைக்க. “நீர் முகம் சேர்த்தி” என்றது,’தலை முழுகி’ என்றபடி. மணி நீர் - தெளிந்த நீர். கண்ணி - 67: பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக மகளிரது பருவம் ஏழாகச் சொல்லப்படும். அவை பற்றி வரும் பகுதிகளில் காண்க. மாது - அழகு; இனிமை. இவர்தல் - மீதூர்தல். கண்ணி - 68: சூளிகை - மேல் மாடத்தின் நெற்றி. சூட்டு - சிகரம் ‘இங்கெல்லாம் மின்னல்போல ஒளிவீச’ என்க. சுளிகை, சுட்டிகை. இவை மகளிர் நெற்றியில் அணியும் அணி வகைகள். வாளிகை - ஒருவகைக் காதணி. ‘இவை மின் விலக’ என்க. கண்ணி - 69: மால் - மயக்கம். கண்ணி - 69, 70: நூல் ஏறு தாமம் - அருள் நூல்களில் எல்லாம் புகழ் இடம் பெற்று விளங்கும் கொன்றை மலர் மாலை. சடாதாரி - சடையை உடைய சிவபெருமான். யாமம் - இரவுப் பொழுது. அடும் - (எம்மைக்) கொல்லும். கண்ணி - 70, 71: சிலர், (அழகால்) ‘இவன் மன்மதனே’ என்பார். சிலர் அதனை மறுத்து, அங்ஙனம் கூறுவது பொருந்து வதன்று; (இவனது அழகு காமனுக்கு இல்லை - காமன் கரியன்; இவன் செய்யன்) என்பர். சிலர் ‘இவன் வேறு யாவன்’ என ஐயுறுவர். சிலர் ஆற்றாமையால் கையோடு கையை எறிவார். பலரும் முன்பே
|