| 72. | பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு துன்னரி மாலையாச் சூடுவார்; - முன்னம் |
| 73. | ஒருகண் எழுதிவிட்(டு) ஒன்றெழுதா தோடித் தெருவம் புகுவார்; திகைப்பார்; - அருகிருந்த |
| 74. | கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார்; - அண்ணல்மேற் |
| 75. | கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார் திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார்; - ஒண்ணிறந்த |
போய்விட்ட நாணத்தோடு, பின்பு தாம் அணிந்திருந்த சங்க வளையல்களையும் இழப்பர். கண்ணி - 71, 72: பூ மன்னும் - அழகு நின்ற. பொன் அரி மாலை பல அணிகலங்களுள் ஒன்றாக மகளிர் கழுத்தில் அணியப்படுவது. அதனையே இப்பொழுது அவர்கள் மயக்கம் மிகுதியால் சிவபிரான் தம்மைத் தனக்கு உரியர் ஆக்கிக்கொள்ளக் கட்டும் மாங்கல்ய சூத்திரமாக (தாலிக் கயிறாக) நினைத்துத் தாங்களே எடுத்துப் புனைந்து கொள்வார்கள். ‘துன் மாலை. அரி மாலை’ எனத் தனித் தனி இயைக்க. துன் மாலை - இருவரும் ஒன்றுபடுதற்கு ஏதுவான மாலைத்தாலி, அரிமாலை அழகிய மாலை. அரி - அரித்தல் செய்யப்படுவது. கண்ணி - 73: கண்களில் மைதீட்டத் தொடங்கித் தீட்டியவர்கள் ஒரு கண்ணிற்குமட்டும் தீட்டிய பொழுது உலா ஒலி கேட்டு அதனை விட்டுவிட்டு ஓடித் தெருவிலே வந்து நின்றார்கள். ‘தெருவம்’ என்பதில் அம், சாரியை கண்ணி - 74: மயக்கத்தால் நிலைக் கண்ணாடியை, ‘படுக்கை’ என்று நினைத்து, அதன்மேல் பஞ்சைச் சொரிந் தார்கள். பந்தினை, ‘கிளி’ என்று நினைத்து அதற்கு, ‘சிவா, முக்கண்ணா, பிறை சூடீ’ என்றாற்போலும் சொற்களைச் சொல்லும்படி. தங்கள் இசைபோலும் சொற்களைச் சொல்லிப் பயிற்றுவிப்பார். கண்ணி - 74, 75: அண்ணல், சிவபெருமான். மாசாலம் - பெருங்கூட்டம். கோலுதல் - குவித்தல். ‘மகளிருடைய அனைத்துக் கண்களும் சிவபெருமான் ஒருவன்மேலே சென்று குவிந்தன’ என்றபடி. திண்ணம் நிறைந்தார் - ‘இவனைப் பற்றி யல்லது தனியே மீளோம்’ என்னும் உறுதியுடன் கூடி நின்றார்கள். ‘திண்ணத்தோடு’ என ஓடுருபு விரிக்க. அவர்கள் கருதியது கூடாமையால் திகைத்தார்கள்.
|