1. பேதை | 76. | பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால் தூதைச் சிறுசோ றடுதொழிலாள்; - தீதில் |
| 77. | இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள்; நலஞ்சேர் உடையாலும் உள்உருக்க கில்லாள்; - நடையாலும் |
| 78. | கௌவைநோய் காளையரைச் செய்யாள்; கதிர்முலைகள் வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள்; - செவ்வன்நேர் |
| 79. | நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்;தன் செவ்வாயின் வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள்; - பூங்குழலும் |
கண்ணி - 76: ஐந்துமுதல் ஏழ் ஆண்டு முடியப் பேதைப் பருவம். இப்பருவத்தில் காமக் குறிப்புத் தோன்றாதாயினும் உலாப் பிரபந்தத்தில் மற்றைப் பருவ மகளிரோடு இப்பருவ மகளிரையும் கூட்டி நிரப்புதல் வழக்கு. இப்பிரபந்தம் பட்டாங் குரைப்பதின்றிப் புனைந்துரை வகையால் தலைவனைச் சிறப்பிப்பதேயாகலின். பிழையாமை - கடவாமை. தூதை - சிறுமட்கலம். ‘பேதை சிற்றில் இழைத்துச் சிறுசோறட்டு விளையாடுவாள்’ என்றபடி. கண்ணி - 77: உம்மைகள் எச்சப் பொருள. எக்கழுத்தம் - செருக்கு; தன் பெண்மை நலத்தைத் தானே வியந்து செருக்குதல். இதுமுதலியன பேதைப் பருவத்தாளிடத்து இல்லாமை யறிக. நலம் - அழகு. உடையால் உள் உருக்குதல், பொன்னும், மணியும் பொருந்திய உடைகளின்வழி உண்டாகும் செயற்கை அழகால் ஆடவரது உள்ளங்களை உருகச் செய்தல். கண்ணி - 78: கௌவை - பழிச்சொல். அஃது, இவன், ‘தான் யார், இவள் யார்’ என்று எண்ணாமல், பலருங் காண இவளை உற்று நோக்குகின்றான் - எனப் பலராலும் பழிக்கப் படுதல், ‘கௌவையால்’ என உருபு விரித்து, ‘நோய் செய்யாள்’ என இயைக்க. நோய் செய்தல் - வருத்துதல் “காளையரை” என்பதை எல்லாவற்றோடும் கூட்டுக. ‘கதிராகிய முலைகள்’ என்க. கதிராதல், உண்மை தெரிக்கும் அளவாய் இருத்தல். “முலைகள் தொழில் பூணாள்” எனச் சினைவினை முதல்மேல் நின்றது. வெவ்வ நோய் - கொடிய வருத்தம். கண்ணி - 78, 79: செவ்வன் - செவ்வையாக. நேர் நோக்கிலும் - ஆடவர் நேர்நின்று பார்த்தபோதிலும். நோய் நோக்கம் நோக்காள் - அவர்கள் உள்ளத்தில் காம நோய் உண்டாக நோக்கும் நோக்கமாக நோக்க அறியாள்.
|