| 93. | வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்(கு) அஞ்சனத்தை யிட்டங்(கு) அழகாக்கி - எஞ்சா |
| 94. | மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி அணிஆர் வளைதோள்மேல் மின்ன - மணியார்ந்த |
| 95. | தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க் காமன் உருவம் வரவெழுதிக் - காமன் |
| 96. | கருப்புச் சிலையும் மலர்அம்பும் தேரும் ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் - விருப்பூரும் |
கண்ணி - 93: கண்கள் தம்மியல்பில் தாம் நின்றனவா யினும், காணும் காளையருள் சிலர் தம்மை அவள் விரும்பி நோக்குகின்றாளாகக் கருத நிற்றலை இங்கு, “வஞ்சனை” என்றார். இயல்பிலே கவர்ச்சி யில்லாதவற்றை அஞ்சனம் தீட்டி அழகாக்கினாள். கண்ணி - 93, 94: எஞ்சா - அணிய வேண்டுவனவற்றுள் எதுவும் குறையாத, மணி - நவமணி, ஆழி - மோதிரம். வளை - தோள் வளை. தான் மங்கைப் பருவத்தள் அல்லளாயினும் அப்பருவத்தாரோடு ஒப்பத் தோன்றும் ஆசையால் அவர்தம் அணிகலங்களையெல்லாம் தானும் அணிந்து ஒப்பனை செய்து கொண்டாள். கண்ணி - 94 - 96: மணி ஆர்ந்த - அழகு நிறைந்த. ‘வெண்ணலை இடமாகக் கொண்டு, அதன்கண் எழுதினாள்’ என்க. மங்கையர்போல நன்கு ஒப்பனை செய்து கொண்டு தோழியருடன் தெருவில் வந்தவள், ‘தனது அழகுக்கு ஏற்ற காதலன் மன்மதன் ஒருவனே’ என்னும் எண்ணத்தினால் அவன் உருவத்தை இவள் வெண்மணலிலே எழுதிப் பார்க்க எழுதிக்கொண்டிருந்தாள். அது பொழுது சிவபெருமான் தன் இயல்பிலே தான் இடப வாகனத்தின்மேல் அங்கு உலாப் போந்தான். அவனைக் கண்டதும் இப்பெதும்பை அவன் காமனிலும் மிக்க அழகுடையனாய் இருந்தலைக் கண்டு கரை கடந்த காதலை உடையளாய் நிலையழிந்து நின்றுவிட்டாள். கரும்பு + சிலை = கருப்புச் சிலை. சிலை - வில், மன்மதனுடைய தேர் தென்றற் காற்று. அஃது உருவம் இல்லதாயினும் அதன் போக்கினைச் சில கீறல்களால் எழுதிக் காட்டுதல் உண்டு. ஒருப்பட்டு - காதலனாக ஏற்றுக் கொண்டு. உடன் - அவனுக்குரிய பொருள்கள் பலவற்றையும் தொகுத்து. ஊர்தல் - மீதூர்தல், ‘மீதூர்தற்கு ஏதுவான தீர்த்தன்’ என்க. தீர்த்தன் - பரிசுத்தன். வான
|