| 97. | தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன் வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர |
| 98. | நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும் நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் - நன்றாகக் |
| 99. | கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட |
3. மங்கை | 100. | மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய |
| 101. | அங்கை கமலம்; அடிகமலம்; மான்நோக்கி கொங்கை கமலம்; முகம்கமலம் - பொங்கெழிலார் |
| 102. | இட்டிடையும் வஞ்சி; இரும்பணைத்தோள் வேய்எழிலார் பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு - மட்டுவிரி |
| 103. | கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில் ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர் |
மால் ஏறு - வானவருள் ஒருவனாகிய மாயோனாம் விடை. வானம் - உயர்வும் ஆம். தான் - பெதும்பை. ‘நன்று அறிவார் அமரச் சொன்ன’ என்க. அமர - யாவரும் விரும்பும் வண்ணம். நலம் - மகளிர்க்கு உரியன வாகச் சொல்லப்பட்ட உறுப்பிலக்கணங்கள். நிறை - மனம். தன் இயல்பில் ஓடாதவாறு நிறுத்தும் ஆற்றல். கை வண்டு - வளையல். இது முன்னர்க் கூறப்படாமை யால் இப்பொழுது மற்றை அணிகலங்களுடன் அணிந்து வந்தாள். என்க - கண் வண்டு, உருவகம். கலை - உடை. நெய் விண்ட - மண நெய் பூசப்பட்ட “நின்றொழிந்தாள்” என்பது ஒருசொல். கண்ணி - 99, 100: பன்னிரண்டு பதின்மூன்றாம் ஆண்டு கள் மங்கைப் பருவம், மங்கை இடம் - மங்கைப் பருவத்தை அடைந்தவள் இருக்க வேண்டிய இடம். கண்ணி - 101 - 103: மங்கையது உறுப்புக்களின் வருணனை. நோக்கு - பார்வை. இட்டிடை - சிறிய இடை. வஞ்சி - கொடி. பணைத்தோள் - பருத்த தோள். வேய் - மூங்கில். அல்குல் - (கண்ணி - 64. உரை பார்க்க) மட்டு விரி தேனோடு பூக்கள் மலர்கின்ற. அறல் - கருமணல்.
|