| 104. | வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக் கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள் |
| 105. | காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித் தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து, - மாதராள் |
| 106. | பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும் சொற்கோட்டி கொண்டிருந்த ஏவ்வைக்கண் - நற்கோட்டு |
| 107. | வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர் |
| 108. | தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும் வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான் |
| 109. | தார்நோக்கும் தன்தாரும் நோக்கும்; அவனுடைய ஏர்நோக்கும்; தன்ன தெழில்நோக்கும்; - பேரருளான் |
| 110. | தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும்; அவன்மார்பின் நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண்நோக்காது |
கண்ணி - 104: வாசிகை, வாசிகைபோல வளைத்துத் தலையில் சூடும் மாலை. கண்டி - கழுத்தணி. கண்ணி - 106: பூவை நாகணவாய்ப் புள். கோட்டி கொள்ளுதல் - திறம்படப் பேசுதலை மேற்கொள்ளல். ஏல்வை - பொழுது. கோடு - சிகரம். கண்ணி - 107: விலங்கல் - மலை. கண்ணி - 108: தாழ்தல் - தங்குதல். வாழுமே - உயிர் வாழ்வாளே! மம்மர் - மயக்கம். கண்ணி - 109, 110: ‘அவனுடைய அழகுக்கு ஒத்த அழுகுடையவளாய் நான் இருக்கின்றேனா’ என்பதை இருவர் தோற்றத்தையும் ஒப்பு நோக்கும் முறையால் ஆராய்கின்றாள். ஆடவர் போக மாலையே ‘தார்’ எனப்பட, மகளிர் போக மாலை ‘மாலை’ எனப்படுமாயினும் அதனையும் பொதுப்பட இங்கு, “தார்” என்றார். ஏர், எழில் இவை ஒருபொருட் சொற்கள். ஒப்பு நோக்கியபின் ஒப்புத் துணிந்தவளாய், அவன் மார்பை அணைய விரைந்து, அது கூடாமையால் பெருமூச் செறிந்தாள்.
|