பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை214

111.உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய

4. மடந்தை

112.தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர்
113.ஈசன் சிலையும், எழில்வான் பவளமும்,
சேய்வலங்கை வேலும், திரள்முத்தும் - பாசிலைய
114.வஞ்சியும், வேயும், வளர்தா மரைமொட்டும்,
மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப்
115.புருவமும், செவ்வாயும், கண்ணும் எயிறும்
உருவ நுகப்பும்மென் தோளும், - மருவினிய
116.கொங்கையும், வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள்; - ஒண்கேழல்

கண்ணி - 111: காதல் வெள்ளம் கரை யிறந்ததாக அதனிடையே அகப்பட்டு ஆற்ற மாட்டாது வெப்பமாக முச்செறிந்தாள்.

கண்ணி - 112: பதினான்காம் ஆண்டு முதல் பத்தொன்பதாம் ஆண்டு முடிய மடந்தைப் பருவம்.

தமிழின் தெய்வம் - தமிழ்த் தெய்வம். இஃது இனிமையும், அழகும் பற்றி வந்த உவமை. ‘இன்’ வேண்டா வழிச் சாரியை. திருந்திய - பெண்மை நலம் நன்கமைந்த. சீர் - சிறப்பு “ஏய்ந்த சீர்” என்பதனைச் சிலைக்கு அடையாக்குக.

கண்ணி - 113 - 116: சிலை - வில், ‘சிறந்த வில்’ என்றற்கு “ஈசன் சிலை” என்றார். “சேய் வலங்கை வேல்” என்றதும் இது பற்றி. சேய் - முருகன். வலம் - வெற்றி. வெற்றியைத் தருவதனை ‘வெற்றி’ என்றே உபசரித்தார். இனி ‘வலக் கை’ என்பது மெலிந்து நின்றதாக உரைத்தலும் ஆம். மஞ்சு - மேகம், “மேகத்தோடு வரும் மதி” என்றது கூந்தலைக் குறித்தற்கு. மாமதி - நிறைமதி. போல், அசை.

சிலை, பவளம், வேல், முத்து, வஞ்சி (கொடி), வேய் (மூங்கில்), தாமரை மொட்டு, மாமதி இவைகளை நிரலே புருவம், செவ்வாய், கண், எயிறு, (பல்), நுசுப்பு (இடை), தோள், கொங்கை, முகம் இவற்றுடன் பொருத்திக் கொள்க. சிலை முதலாக அனைத்திலும் இரண்டன் உருபு விரிக்க. உருவம் - அழகு. பங்கயப் போது - தாமரை மலர். சேவடி - சிவந்த பாதங்கள்.