பக்கம் எண் :

215திருக்கைலாய ஞானஉலா

117.வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள்; - ஊழித்
118.திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளிய
119.முத்தாரம் கண்டத் தணிந்தாள்; அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப்பெருகி - வித்தகத்தால்
120.கள்ளுங், கடாமுங், கலவையுங் கைபோந்திட்டு
உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் - தெள்ளொளிய
121.காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும்
122.தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங்(கு) - ஒண்ணுதலாள்

கண்ணி - 117: குறங்கு - துடை; ஆழித் தேர் - சக்கரத்தையுடையதேர். அல்குல் - (கண்ணி. 64 உரை பார்க்க.)

கண்ணி - 118, 119: திரு - அழகு. மற்றொரு மதியம் - வானல்த்தில் இயல்பாய் உள்ள சந்திரனுக்கு வேறான மற்றொரு சந்திரன். இது மயக்க அணி. நாள் மீன் - அசுவினி, பரணி முதலிய நட்சத்திரங்கள். ‘அவைகட்குக் கணவன் சந்திரன்’ என்பது புராணம். அதனால், ‘அவை அங்ஙனம் மயங்கிச் சூழ்ந் தாற்போல்’ என்றது தற்குறிப்பேற்ற அணி, கண்டம் - கருத்து.

‘அணிகலங்கள் மொய்த்தமையால் (நிறைந்தமையால்) ஆரவாரம் (புகழுரை) மிகப் பெருகி’ என்க.

கண்ணி - 119 - 122: வித்தகம் - சதுரப்பாடு; திறமை, கள் - தேன். அது பூ மாலையைக் குறித்தது. கடாம், இங்குக் கத்தூரி, இவை வேறு பொருளாம் நயம் தோற்றி நின்றன. கலவை - சந்தனக் கலவை கைபோதரல் - தோழியர்களால் கொண்டு வரப்படுதல். அவைகளைக் கொண்டு வரும் தோழியர் இவளது அருகிலும், சேய்மையிலும் நின்றதை ‘உள்ளும், புறம்பும் செறிவு’ என்றார். அவர் அங்ஙனம் நின்றது இவளை நோக்கியாகலின் “அமைத்து” என்றார்.

காளிங்கம் - நீலமணி. தாள் - அடிப் பாகம், ‘தாளை யுடைய தாமம்’ என்க. தாமம் - மாலை. நெற்றியிலும் ஓர் இரத்தினமாலை கட்டுவர். நுதல் - நெற்றி.