பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை216

123.தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னும்ஓர் காமரம் யாழமைத்து - மன்னும்
124.விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு - அடல்வல்ல
125.வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க்(கு) எஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல

‘தோள் எங்கும் அப்பி’ என்க. தண் - குளிர்ச்சி. சதுர் - பெருமை. அது ‘சதிர்’ என மருவி வழங்கும். “வண்ணம் பெற” என்றதனால். சாந்து, ‘செஞ்சாந்து’ என்க. மட்டித்தல் - பூசுதல்.

கண்ணி - 122 - 124: ‘தன் தோழியர்கள், அமர் தோழியர்கள்’ என்க. அமர்தல் - விரும்புதல். தவிசு - ஆசனம். பின்னும் ஓர் காமரம் - முன் பாடியது போகப் பின்னும் ஓர் பண்ணினை ‘யாழின்கண் அமைத்து’ என்க. விரும்பும் பண்கள் தோற்றுமாறு இசைகள் வேறு வேறு வகையாக எழும்படி நரம்புகளைக் கட்டுதல் வேண்டும் ஆதலின் அதனை “அமைத்து” என்றார்.

மன்னும் விடம் - நிலைபெற்றுள்ள விடத்தைக் கொண்டுள்ள வண்ணக் கண்டம் - கரிய கண்டம். வேதியன் - வேதத்தை ஓதுபவன்; சிவபெருமான்.

மகளிர் மடல் பாடுதல் இல்லை யெனினும் பலர் அறியப் பாடாமல் தான் இருக்குமிடத்திலே தோழியர் இடையே நகை உண்டாகும்படி தான் சிவபெருமான்மேல் கொண்ட காதலால் நாண் இறந்து பாடுவாள்போலப் பொய் யாகப் பாடத் தொடங்கினாள்.

மடலாவது, ஆடவன் ஒருவன் தான் காதலித்த கன்னிகை தனக்குக் கிட்டாமையால் ஆற்றாது தான் உயிர்விடும் நிலையில் உள்ளதைத் தெருக்கள் தோறும் சென்று தெரிவித்துப் பாடுதல் அது நாணத்தையே அணிகலமாகக் கொண்ட மகளிர்க்கு இயல்வதில்லை. அதனால் மகளிர் மடல் பாடிய தாகத் தமிழில் இலக்கியம் இல்லை. ஆயினும் இவள் தன் இல்லத்திற்குள் தன் தோழியர்முன் வேடிக்கையாகச் சிவபெரு மானை முன் வைத்து மடல் பாடத் தொடங்கினாள்.

கண்ணி - 124 - 126: ஈண்டு - ‘அவள் பாடுகின்றாள்’ என்றது. ‘இந்த நேரத்தில் கேட்டு’ என்க. அடல் - பகைவரை வெல்லுதல். வேல், இங்கு முத்தலை வேல்; சூலம், வில், மேரு மலையாகிய வில். மால் வல்லான் - மயக்கத்தைத் தர வல்லவன், கோலம் - அழகு.