| 126. | மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால அணிஏறு தோளானைக் கண்டாங்(கு) - அணியார்ந்த |
| 127. | கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக் காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள் |
| 128. | எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம் நல்லாய் படுமேற் படுமென்று - மெல்லவே |
| 129. | செல்ல லுறும்;சரணம் கம்பிக்கும்; தன்னுறுநோய் சொல்லலுறும்; சொல்லி உடைசெறிக்கும்; - நல்லாகம் |
| 130. | காண லுறும்;கண்கள் நீர்மல்கும்; காண்பார்முன் நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது; - பூணாகம் |
மணி - அதன் கழுத்தில் உள்ள மணி. ஏறு - அந்த மணியினின்றும் எழுந்து எங்கும் பரவுகின்ற ஓசை. ஆங்கு நோக்குவாள் - அந்த ஓசை வந்த வழியைப் பார்க்கின்றவள். அணி - அழகு. ஆங்கு - அப்பொழுதே. அணி ஆர்ந்த கோட்டி - வரிசை வரிசையாய் அமர்ந்திருந்த தோழியர் கூட்டம். கண்ணி - 127, 128: குழை - காதணி. வாய் துலக்குதல் - இயல்பாகவே சிவந்திருக்கின்ற வாயை மேலும் சிவக்கும்படி தம்பலந்தின்னல். நுதல் - நெற்றி, அது முன்பே குங்குமத்தால் சிவந்துள்ளது. எனவே, ‘நுதல் சிவப்ப வாய் துலக்கி முகத்தைக் காட்டி’ என்க. இவையெல்லாம் தனது காதற் குறிப்புத் தோன்றச் செய்தாள் ஆகலின், “நாட்டார்கள் எல்லாரும் கண்டார்” என்றார். பலரும் அறியத் தான் சிவபெருமானைக் காதலித்து நின்றமையால், ‘அவன் பேரருளாளன் ஆதலின் அவனும் எனது கருத்திற்கு உட்படுவான்; ஆயினும் என் ஆயத்தார் அதற்குத் தடையாய் இல்லாமல் இசைதல் வேண்டுதல்’ என்பாள், “இங்கு ஆயம் நல்லாய்ப் படுமேற்படும்” என்றார். ‘நல்லவாய்’ என்பது “நல்லாய்” எனக் குறைந்து நின்றது. கண்ணி - 129, 130: “உறும்” என்பது முதலிய பலவற்றிற்கும் ‘உறுவாள்’ என்பதுபோலப் பொருள் உரைக்க. சரணம் கம்பிக்கும் - கால் நடுங்குவாள்; இஃது அவள் நிலை தளர்ந்தமையைக் குறித்தது. செறித்தல் - சரிந்து வீழாதபடி இறுகக் கட்டுதல். ஆகம் - மார்பு. சிவனுடைய மார்பு.
|