| 131. | புல்லலுறும் ‘அண்ணல்கை வாரான்’என் றிவ்வகையே அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள் |
| 132. | தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப் பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி |
5. அரிவை | 133. | செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் - ஒண்கேழ்நல் |
| 134. | திங்களும், தாரகையும், வில்லும், செழும்புயலும் தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் - பொங்கொளிசேர் |
| 135. | மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே தன்ஆவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும் |
கண்ணி - 130, 131: “நாணல் கூறும் நெஞ்சம்” பெயரெச்சத் தொடர். நெஞ்சம் ஒட்டாமையால் (தடுத்தலால்) தன் மார்பிலேயே தன்கையைத் தான் அணைத்துச் சிவனைத் தழுவியது பொய்யாய் இருத்தலால் ‘இவன் என் கைக்கு அகப்படவில்லையே’ என்று சொல்லி இவ்வாறு பெரிதும் அல்லற்படுவாள். கண்ணி - 131, 132: இவ்வாறு மூழ்கும் பெருந் துயரத் தால் அவள் தன்னுடைய மேனியே பொன்பூத்தமையால் கொன்றை மாலை போல ஆய்விட, தான் சிவபெருமான் அணிந்துள்ள கொன்றை மாலையாகிய அந்தப் பொன் போலும் பொருளைப் பெறவிரும்பும் காரணத்தால் புலம்பலாயினாள். “கொண்டு” என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு. கண்ணி - 133: இருபது முதல் இருபத்தைந்தாம் ஆண்டு முடிய அரிவைப் பருவம். சீறடி - சிறிய பாதம். அம் கேழ் - அழகிய நிறம். அஃதாவது, ‘நிறத்தால் அழகு பெற்றவள்’ என்றபடி. கண்ணி - 134, 135: திங்கள் முகம்; தாரகை (விண்மீன்) நெற்றியில் அணிந்துள்ள முத்துப் பட்டம்;’ வில் புருவம்; புயல் (மேகம்) கூந்தல்; செவ்வாய் சிலேடை. ‘செவ்வாய்’ என்னும் கிரகம்; சிவந்த வாய். இவைகளால் வானத்தைத் தன்னிடமே விளங்கக் காட்டுவாள். மீன் ஆர் - மின்னல் பொருந்திய; இதனை வானுக்கு அடையாகக் கொள்க. தன் ஆவார் - தன்னை யொப்பவர்.
|