| 136. | “இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்”பென்னும் - சொல்லாலே |
| 137. | அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர் |
| 138. | இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார் நடைபெடை அன்னத்தை வென்றாள்; - அடியிணைமேல் |
| 139. | பாடகம் கொண்டு பரிசமைத்தாள்; பன்மணிசேர் சூடகம் முன்கை தொடர்வித்தாள்; - கேடில்சீர்ப் |
| 140. | பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள்; - பொன்னனாள் |
| 141. | இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம் அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் - முன்னமே |
| 142. | பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய |
கண்ணி - 136: சொல், திருக்குறள். சொல்லால் - சொல் சொல்லப்படுதலால். இயற்கை அழகு இருப்பினும் ஆடை அணிகலங்களாகிய செயற்கை யழகு இல்லாவிடில் மற்றை மகளிர் இகழ்ச்சி செய்வார்கள் என்று கருதி அவைகளை அணிந்தாள் என்க. கண்ணி - 137: அல்குல் (கண்ணி - 64 உரை பார்க்க.) கண்ணி - 137, 138: நல்கூர்தல், வறுமை எய்தல். அஃது இங்கே சிறுகுதலைக் குறித்தது. இடையே - மேலும், கீழும் உள்ள உறுப்புக்கள் செழித்திருக்க அவைகளுக்கு இடையே துவண்டு மெலிய. கண்டாள் - செய்தாள். என்றது, இயற்கையைச் செயற்கை போலக் கூறியது. கண்ணி - 139: பரிசு அமைத்தாள் - தக்கபடி அமைத்தாள். கண்ணி - 140: பொன் அரி மாலை - பொன்னால் அரிப்புத் தொழில் அமையச் செய்த மாலை. இது பெரும் பான்மை மார்பில் தொங்கவிடுவது. சிறுபான்மை தலையிலும் சுற்றப்படும். கழுத்துக்கு மகிழ்ச்சியில்லையாயினும் அதனைப் பொலிவித்தலை மகிழ்வித்ததாகக் கூறினார். பொன் அன்னால் - இலக்குமி போன்றவள். கண்ணி - 141; வாங்கியது தோழியரிடமிருந்து. இமையவர்தம் அண்ணல் சிவபெருமான். ‘அவன்மேல் தான் முன்னமே இட்ட ஆசையால்’ என்க. இட்ட - வைத்த
|