பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை220

143.இன்னிசையும், இப்பிறப்பும், பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையையுங் கைவிட்டுப் - பொன்னனையீர்
144.இன்றன்றே காண்ப(து) எழில்நலங் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்(கு)என்று - சென்றவன்தன்
145.ஒண்களபம் ஆடும்; ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழ்நல்
146.கூந்தல் அவிழ்க்கும்; முடிக்கும் கலைதிருத்தும்;
சாந்தம் திமிரும் முலையார்க்கும் - பூந்துகிலைச்
147.சூழும்; அவிழ்க்கும்; தொழும்அழும் சோர்துயருற்(று)
ஆழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் - சூழொளிய

கண்ணி - 143: இப்பிறப்பைக் கைவிட்டமையாவது, தன் மாட்டு வந்தவனை ஏற்றல் அல்லது, தான் பிறனிடம் செல்லாமையாகிய தனது வழக்கத்தைக் கைவிட்டமை. “தமிழ்” என்றது தமிழ் இசையை.

கண்ணி - 144: எழில் நலம் காண்பது இன்றன்றே - எழுச்சியுள்ள எனது அழகின் சிறப்பை அளந்தறியும் நாள் இன்றன்றோ? அஃதாவது, ‘எனது அழகு சிவபெருமானது உள்ளத்தைக் கவரும் ஆற்றலுடையதோ, இல்லையா - என்பதை அளந்தறிய வேண்டிய நாள் இன்றேயாம்’ என்றாள்.

கொள்ளேனேல் - அவனது உள்ளத்தை யான் கவர்ந்து கொள்ளாவிடில். பெண்மை நமக்கு நன்று அன்று - நம்முடைய பெண்மை நலம் நமக்கு உதவுவதன்று. சென்றவன் - உலாப் போந்தவன் சிவபெருமான்.

கண்ணி - 145: ஒண்களபம் - சிவபெருமானது திருமேனியிலிருந்து காற்றிற் பறந்து திருநீறும் சந்தனச் சாந்தின் துகளும், ‘இவற்றில் ஆடும்’ என்க. ஆடும் - மூழ்குவாள். கண், அரிவைதன் கண்கள். (களவு) என்பது அம் பெற்று ‘களவம்’ என வருவது எதுகை நோக்கி, “களபம்” எனத் திரிந்து நின்றது. களவு ஆடுவபோல் - நோக்கியும் நோக்காதது போல, “கண் களவு கொள்ளும் சிறு நோக்கம்”1 என்றார் திருவள்ளுவரும். கட்டுரைத்தல் - தன் குறிப்பினை வெளிப்படுத்தல்.

கண்ணி - 146: கலை - உடை, திமிர்தல் - பூசுதல். ஆர்த்தல் - கச்சினால் இறுகக் கட்டுதல். துகில் - உயர்ந்த உடை.

கண்ணி - 147: சூழும் - சுற்றுவாள். அயர்வுயிர்த்தல் - பெருமூச்செறிதல்.


1. திருக்குறள் - 1092.