| 152. | அந்தளிர்போற் சேவடியும், அங்கையும் செம்மையால் அந்திவான் காட்டும் அழகினாள்; - அந்தமில் |
| 153. | சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள் ஏரார் இரவின் எழில்கொண்டாள்; - சீராரும் |
| 154. | கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால் தண்ணிளங் காரின் சவிகொண்டாள்; - வண்ணஞ்சேர் |
| 155. | மாந்தளிர் மேனி; முருக்கிதழ்வாய்; ஆதலால், வாய்ந்த இளவேனில் வண்மையாள்; - மாந்தர் |
| 156. | அறிவுடையீர் நின்மின்கள்; அல்லார்போம் என்று பறையறைவ போலும் சிலம்பு - முறைமையால், |
இவ்வெச்சம், “செம்மை” என்புழித் தொக்கு நின்ற ‘உடைமை’ என்னும் வினைக் குறிப்புப் பெயர் கொண்டது. கண்ணி - 152: ‘பாதமும், அகங்கையும் தளிர் போன்றுள்ளன’ என்பதாம். செம்மை - செம்மை நிறம். கண்ணி - 152, 153: அந்தம் - எல்லை... சீர் - அழகு. இதுகாறும் ஒருத்தியே பல சிறுபொழுது களைப் போலத் தோன்றுதலைக் கூறினார்; இனிப் பெரும் பொழுதுகளைப் போலத் தோன்றுதலைக் கூறுவார். கண்ணி - 154: “பயோதரம்” என்பது ‘கொங்கை’ எனவும், ‘மேகம்’ எனவும் இருபொருளைத் தரும் ஆதலால் அது சிலேடையாயிற்று. ஆகவே, “கண்ஆர்” என்பதை, ‘வான மாகிய இடத்து நிறைந்த’ என மேகத்திற்கும், ‘கண்ணிற்கு நிறைந்த’, அல்லது ‘மார்பிடம் நிறைந்த’ எனக் கொங்கைக்கும் பொருத்திக்கொள்க. கண், கொங்கையின் கண்ணுமாம், “இடை” என்பதற்கு, ‘மின்னல்போலும் இடை’ என உரைக்க. கார் - கார்ப் பருவம். அதற்கு இளமையாவது தொடக்கமும், நடுவும், சவி - ஒளி; என்றது தோற்றத்தை. வண்ணம் - அழகு. கண்ணி - 155: ‘மேனி மாந்தளிர்; வாய் முருக்கிதழ்’ என மாற்றியுரைக்க. இவை இரண்டும் இளவேனிற் பருவத்து உளவாவன. சிறுபொழுதுகள் பலவும் பெரும்பான்மை பற்றிக் காரும், வேனிலுமாக அடக்கப்பட்டன. ‘மாந்தருள்’ என உருபு விரிக்க. கண்ணி - 156 - 158: அறிவுடையோராயின் ஆவி காப்பர் ஆதலின், அவர்களை “நின்மின்” எனவும், அல்லாதார் ஆவி விடுவர் ஆதலின், அவர்களை, “போம்” எனவும் பறை யறைவதாகக் கூறினார். இது தற்குறிப்பேற்றம் ‘அறைவ போலும் சிலம்பினைச் சேர்த்தினாள்’
|