பக்கம் எண் :

223திருக்கைலாய ஞானஉலா

157.சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
ஓரா தகலல் உறாதென்று - சீராலே
158.அந்துகிலும், மேகலையும், சூழ்ந்தாள்; அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே
159.பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர்
160.நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும்
161.காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும்
162.ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினா - ளாகிப்

என்க. தேர் அல்குல் - தேர் போலும் அல்குல். ஓராது - (‘அளவு கடந்து அகலின் இடம் இன்றாம்’ என்பதனை) ஆராயாது. அகலல் உறாது என்று - ‘அகலல் தகாது ஆதலின் அடங்குக’ என்று கருதித் துகிலையும் மேகலையும் சுற்றிக் கட்டினாள் - என்க.

கண்ணி - 158, 159: முந்துறவே - இவைகட்கெல்லாம் முன்னதாகவே. அடைய - முழுதும். பூட்டு உறீஇ - உள் அடக்கி நிறுத்துதலை உறுவித்து. தொடி - தோள்வளை. ஏவி - செய்வித்து. ‘தோள்களை மெலிய ஒட்டாமல் செய்ய மாட்டாத தொடிகளை, ‘செய்யும்’ என அறியாமையாற் கருதி ஏவினாள்’ என்றபடி. தோள்கள் மெலிந்தவழி அவை கழன்றொழிவன அல்லது காக்க மாட்டாமை அறிக.

கண்ணி - 160: ஆரம் - கண்ட சரம். மறைத்தது, ஆடவர் வருந்தாமைப் பொருட்டு. வில் பகர்தல் - ஒளி தருதல்.

கண்ணி - 160, 161: ‘மை யாகப் பகரும்’ என ஆக்கம் விரித்து, ‘மழை (மேகம்) என்று சொல்லப்படும் கண்’ என உரைக்க. காவி - குவளை மலர். கதம் - கோபம். தாவிய அஞ்சனம் - பரந்த மை.

“அகவல் உறாதென்று சூழ்ந்தாள், மனம் கவரும் என்பதனால் பூட்டுறீஇ, காப்பு ஏவி, மறைத்து, கதம் தணிப்பாள் போல” என்பனவும் தற்குறிப்பேற்றங்கள்.

கண்ணி - 162: ஆகுலம் - மனக் கவலை. “குணம்” என்றது நடையையும், குரலையும்.