பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை226

7. பேரிளம்பெண்

172.பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் - மண்ணின்மேல்
173.கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே வுளவென்று - பண்டையோர்
174.கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம்
175.அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் - எஞ்சாத
176.பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி
வைத்தன போல வளர்ந்தே ந்தி - ஒத்துச்
177.சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்(கு)
அணங்கும் அமுதமுமாய்த் தோன்றி - இணங்கொத்த
178.கொங்கையாள், கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம்
நங்கையாள், நாகிளவேய்த் தோளினாள்; - அங்கையால்

கண்ணி - 171, 172: முப்பத்திரண்டு முதல் நாற்பதாவது ஆண்டு முடியப் பேரிளம்பெண் பருவம். ஒள் தாங்கு - அழகைக் கொண்டிருக்கின்ற. பணி மொழி - பணிந்த மொழி.

கண்ணி - 173, 174: “கட்டுரை” என்றது திருக்குறளை1 மேம்படுத்தமை, அவ்வுரைக்கு இலக்கியமாய் இலங்கினமை. மண்டலம் - வட்டம். உகிர் - நகம். ‘அவை கண்ணாடிபோல விளங்கின’ என்பதாம்.

கண்ணி - 175: அரவம் அஞ்சியது, தனது படத்தை வெல்லுதல் பற்றி “பரந்தகன்ற” என்பது மீமிசைச் சொல். ‘கொடியபோல நுடங்கும் இடை’ என்க. நுடங்குதல் - துவளுதல். எஞ்சாத - மாற்றுக் குறையாத.

கண்ணி - 176 - 178: செப்பு - கிண்ணம். முகடு - உச்சி. கிண்ணத்தைக் கவிழ்த்து வைக்கும்பொழுது அதன் அடிப்புறம் உச்சியாய் விளங்கும். ‘அதன்கண் மணி அழுத்தி வைத்தன போல’ என்க. மணி, நீலமணி. ஏந்தி - அண்ணாந்து. ஒத்து - இரண்டும் இணையொத்து. சுணங்கு, திதலை. இவை தேமலின் வகை.


1. திருக்குறள் - 1101.